உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு

தமிழகத்துக்கு காவிரியில் 42,000 கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால், காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வினாடிக்கு 42,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவின் மலைநாடு, கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இரு அணைகளில் இருந்து, நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி, தமிழகத்திற்கு 42,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஹாசன் அரகலகூடு தாலுகாவில் உள்ள, பல கிராமங்களில் நேற்று மு ன்தினம் இரவு முழுதும் மழை கொட்டித் தீர்த்தது. மத்திகோடு என்ற கிராமத்தில் வீடு இடிந்து ஜவரம்மா, 62, என்ற மூதாட்டி உயிரிழந்தார். மைசூரு அரண்மனை வளாகத்தின் முன், நேற்று மாலை ராட்சத மரம் சாய்ந்ததில், இரண்டு ஆட்டோக்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. சிறிது துாரத்தில் நின்றதால், டிரைவர்கள் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சித்ரதுர்காவில் கன மழையால், வாணி விலாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களை சூழ்ந்தது. கொப்பால், யாத்கிர் மாவட்டங்களில் விளைநிலங்களுக்குள், தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன. கடலோர மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், கடலுக்குள் சென்ற மீனவர்கள் திரும்பி வந்தனர். நேற்று காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி நிலவரப்படி கொப்பால் குகனுாரில் 6.60 செ.மீ., மழை பதிவானது. ராய்ச்சூர் பிஜங் கெரேவில் 6.30 செ.மீ., கொப்பால் பானாபுராவில் 5.30 செ.மீ., ராய்ச்சூர் ஜம்பலதின்னியில் 4.75 செ.மீ., உத்தர கன்னடா கிளிகனுாரில் 4.65 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. பாகல்கோட், பெலகாவி, பீதர், தார்வாட், கதக், கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பெங்களூரு, மைசூரு, குடகு, மாண்டியா, ராம்நகரில் மிதமான மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sivakumar Thappali Krishnamoorthy
அக் 25, 2025 10:46

திராவிட ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டிவிடாதீர்கள் ..


Ramesh Sargam
அக் 25, 2025 07:54

அணைகளை கட்டுங்கள், மழைக்காலத்தில் விரயமாகும் தண்ணீரை சேமியுங்கள் என்று சொன்னால் கேட்டால்தானே ... அப்படி செய்தால் மக்களின் பிரச்சினை, குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினை முடிவுக்கு வரும். அப்புறம் அவர்கள் அரசை கண்டுகொள்ளமாட்டார்கள். அப்படி என்றால் ஆட்சியில் உள்ளவர்களின் அதிகபட்ச வருமானம் தடைபடும். அதாவது ஆட்சியில் உள்ளவர்களுக்கு கிடைக்கவேண்டிய மாமூல் கிடைக்காது. ஆகையால் அரசு அப்படி அணைகள் எதுவும் கட்டமாட்டார்கள்.


புதிய வீடியோ