வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த அனுதாபங்கள் ......
தார்வாட்: ஹூப்பள்ளியில் கோவிலில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில், ஒன்பது அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் ஹுனக்கல்லில் அச்சவன் காலனி உள்ளது. இங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்களின் பஜனை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு பஜனை முடிந்ததும், முதல் தளத்தில் சமைக்கப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.பின், மாலை அணிந்தவர்களில் 14 அய்யப்ப பக்தர்கள், அங்கேயே தங்கினர். ஒன்பது பேர் முதல் தளத்திலும், ஆறு பேர் தரை தளத்திலும் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீர் கசிவு
நேற்று அதிகாலை 1:30 மணியளவில், தரை தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரின் கால், சமையல் காஸ் சிலிண்டரில் பட்டு, சிலிண்டர் உருண்டது. இதில் டியூப் கழன்று, காஸ் கசியத் துவங்கியது. காஸ் கசிந்து, அப்பகுதி முழுதும் படர்ந்தபோது, பூஜைக்காக தீபம் எரிந்து கொண்டிருந்ததால், தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இந்த விபத்தில், அய்யப்ப பக்தர்கள் அஜ்ஜய்யசாமி, 58, பிரகாஷ் பட்டேகரா, 42, சங்கர் ராயனகவுடர், 29, தேஜஸ் ரெட்டி, 26, பிரவீன் சலவாதி, 24, மங்சு தரோதா, 22, ராஜு ஹர்லாபுரா, 21, சஞ்சய் சவதத்தி, 20, விநாயக் பட்டேகரா, 12, ஆகிய ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, படுகாயமடைந்த ஒன்பது பேரையும், கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில், எட்டு பேருக்கு 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சிறுவன் விநாயக் பட்டேகராவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி செய்யவும் உத்தரவிட்டார்.மாவட்ட கலெக்டர் திவ்யா பிரபு கூறுகையில், ''காஸ் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வேறு மருத்துவமனைக்கு அனுப்ப தேவையில்லை,'' என்றார். காங்., உதவி
இதற்கிடையில், காயமடைந்தோருக்கு தலா 10,000 ரூபாய், மாவட்ட காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. தகவல் அறிந்த நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் மகேஷ் தெங்கினகாய், பிரசாத் அப்பையா, ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் மருத்துவமனைக்கு வந்து, காயம் அடைந்தோருக்கு ஆறுதல் கூறினர்.� பக்தர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில், அவர்கள் குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர். � குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆறுதல் கூறினார்.
ஆழ்ந்த அனுதாபங்கள் ......