டில்லி, பஞ்சாபில் ஹெராயின் பறிமுதல் பெண் உட்பட 8 பேர் பிடிபட்டனர்
புதுடில்லி:போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருவரை கைது செய்த போலீசார், 809 கிராம் உயர் ரக ஹெராயின், மூன்று மொபைல் போன்கள் மற்றும் 3,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த காஷிம்,36, ஜூலை 29ம் தேதி சீமாபுரியில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய காஷிமிடம் இருந்து, 789 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையின் போது, பிந்து தேவி என்பவர் தலைமையில், தானும் தன் மருமகன் ஆரிப் என்ற சமீர் ஆகியோர் போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, குருகிராம் அருகே சைனிகேடா கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பிந்து தேவி,48, கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டு, 20 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 809 கிராம் ஹெராயினின் சர்வதேச மதிப்பு 80 லட்சம் ரூபாய் என போலீசார் கூறினர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய காஷிம், இரும்புக் கடையில் வேலை செய்தபோது, போதைப்பொருளுக்கு அடிமையானார். அப்போது, பிந்து தேவியுடன் ஏற்பட்ட தொடர்பால் போதைப்பொருள் விற்பனை செய்யத் துவங்கினார். அதேபோல, பிந்து தேவியின் கணவன் மற்றும் மகன் ஆகிய இருவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். இதனால், பிந்து தேவியும் போதைப் பொருள் விற்பனையில் இறங்கி அதற்காக ஒரு கும்பலையே உருவாக்கினார். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. பஞ்சாப் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த, ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து. 1.50 கிலோ ஹெராயின் மற்றும் ஏழு சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.