உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்க கூடுதலாக 800 கிடங்குகள் தேவை

ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்க கூடுதலாக 800 கிடங்குகள் தேவை

புதுடில்லி; 'ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், நாடு முழுதும் கூடுதலாக, 800 கிடங்குகள் தேவைப்படும்' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான இரண்டு மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது, பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளன.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை மற்றும் சட்டக் கமிஷனிடம், 2023ல் தேர்தல் கமிஷன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டு உறுதிச் சீட்டு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான இயந்திரங்கள் வைப்பதற்கு கிடங்கு வசதிகள் தேவை. இதன்படி, நாடு முழுதும் கூடுதலாக, 800 கிடங்குகள் தேவைப்படும். இந்த கிடங்குகளை மாநில அரசுகளின் பங்களிப்புடன் அமைக்கலாம்.இது சற்று கடினமான மற்றும் அதிக செலவு பிடிக்கும் பணி. மேலும், அந்த கிடங்குகளில் பாதுகாப்பு வசதிகள், சிசிடிவி கேமராக்கள், மின்சார வசதி, தீயணைப்பு வசதி உள்ளிட்டவையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அமைத்தால், தேர்தல் தொடர்பான இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாடு முழுதும், 772 மாவட்டங்கள் உள்ளன. கடந்த, 2012ல், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயந்திரங்கள் வைப்பதற்கென தனியாக கிடங்குகள் அமைக்கும் முயற்சியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டது. இதன்படி, 326 மாவட்டங்களில் புதிய கிடங்குகள் கட்ட வேண்டும் என அடையாளம் காணப்பட்டன.கடந்த, 2023 மார்ச் மாத நிலவரப்படி, இதில், 194 கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 106 கிடங்குகள் கட்டுமான நிலையில் இருந்தன. இதைத் தவிர, 13 கிடங்குகளுக்கான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமானம் துவங்கவில்லை. அதே நேரத்தில், 13 கிடங்குகளுக்கு நிலம் தேர்வு செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை