உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் படையின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

 பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் படையின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், தேடப்பட்ட நக்சல் அமைப்பின் முக்கிய தலைவரும், பாதுகாப்பு படையினர் மீது, 26 முறை கொடூர தாக்குதல் நடத்தியவருமான மத்வி ஹித்மா, 43, அவரது மனைவி உட்பட ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். க டந்த சில மாதங்களாக நாடு முழுதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தீவிர ரோந்து இந்நிலையில், ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் ஆந்திர, சத்தீஸ்கர் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், ஆறு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், 50 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ம த்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நக்சல் அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள், 'சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி' எனவும் குறிப்பிடுகின்றனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது மனைவி ராஜேவும், மத்வி ஹித்மா உடன் இணைந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். சத்தீஸ்கரிலும் வேட்டை ஆந்திராவைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலும் என்கவுன்டர் நடந்தது. எர்ராபோர் பகுதியில் நேற்று காலை நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி., கிரண் சவான் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த பகுதி யில் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமித் ஷா விதித்த கெடு!

'நம் நாட்டில், நக்சல் அமைப்பை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கிடையே, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமித் ஷா சமீபத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போ து அவர், மிகவும் தேடப்படும் நக்சல்களை வரும் நவம்பர் 30க்குள் ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதாகவும், குறிப்பாக ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் நக்சல் அமைப்பு தீவிரமாக செயல்பட காரணமாக உள்ள ஹித்மாவை இக்காலக்கெடுவுக்குள் கொல்ல வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் , அக்காலக்கெடு நிறைவடை ய, 12 நாட்களுக்கு முன்பே, மத்வி ஹித்மாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

யார் இந்த மத்வி ஹித்மா?

சத்தீஸ் கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பூர்வதி பகுதியில், 1981ல் பிறந்தவர் மத்வி ஹித்மா. 1990களில் நக்சல் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், வழக்கத்திற்கு மாறான, 'கொரில்லா தாக்குதல்கள்' எனப்படும் மறைந்திருந்து தாக்கும் பாணியில் கைதேர்ந்தவர். பாதுகாப்பு படையினருக்கு எதிராக இதுபோ ன்ற தாக்குதல்களை பலமுறை தலைமை தாங்கி நடத்தி நக்சல்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் விடுதலை கொரில்லாப் படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட ஹித்மா, தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பின், நக்சல் மத்திய குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். உயர்மட்ட தலைமைக்குழுவில் இடம்பெற்ற பஸ்தரைச் சேர்ந்த ஒரே பழங்குடி உறுப்பினர் இவர் என்று நம்பப் படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருந்த அவர், 2013ல் சத்தீஸ்கரில் நடந்த தர்பா பள்ளத்தாக்கு படுகொலையில் முக்கிய குற்றவாளி. இந்த படுகொலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட, 27 பேர் கொல்லப்பட்டனர். 2017ல் சுக்மாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த, 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில், மத்வி ஹித்மா முக்கிய பங்கு வகித்தார். இதுபோன்ற, 26க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் இவரது நேரடி ஈடுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இது அவரை, பாதுகாப்பு படையினரால் தேடப்படும் முக்கிய நபர்களில் ஒருவராக மாற்றியது. நவீன ஆயுதங்களுடன் படையை வழிநடத்தி சென்ற மத்வி ஹித்மா, நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வனப்பகுதிக்குள் வலம் வந்தார். இதனால், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் பல ஆண்டுகளாக அவர் சிக்காமல் இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஹித்மாவின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை