புதுடில்லி: ''பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து, அவர்களின் நிலையை உயர்த்தும் சமூகம் மட்டுமே முன்னேறி செல்லும். மூன்றாவது முறையாக நாங்கள் அமைக்கவுள்ள ஆட்சி, பெண்கள் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.'சாஷக்த் நாரி - விக் ஷித் பாரத்' எனப்படும், 'பெண்களுக்கு அதிகாரம் - வளர்ந்த பாரதம்' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 8,000 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் தொகையை பிரதமர் வழங்கினார். தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா எனப்படும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் வாயிலாக லட்சாதிபதிகளாகி, பிற மகளிர் சுய உதவி குழுக்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவு அளிக்கும் பெண்களை பிரதமர் கவுரவித்தார்.'நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்தின் கீழ், விவசாய பயன்பாட்டுக்கான 1,000 ட்ரோன்களை பெண்களுக்கு அளித்தார். மேலும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான 2,000 கோடி ரூபாய் முதலீட்டு உதவி தொகையை அளித்தார். அதன் பின் பிரதமர் மோடி பேசியதாவது:பெண்களின் வாழ்க்கை மற்றும் கஷ்டங்களுக்கு முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் முன்னுரிமை அளிக்கவில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு உதவ பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தியது.சமையல் அறையில் பயன்படுத்தப்படும் விறகு மற்றும் நிலக்கரி புகையினால் பெண்களின் உடல்நலன் பாதிக்கப்படுவது, சானிட்டரி நாப்கின் பயன்பாடு, கழிப்பறை வசதி இல்லாதது உட்பட பெண்களுக்கான பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசிய முதல் பிரதமர் நான் தான். இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்னை கேலி பேசின.என் வீட்டிலும், சுற்றுப்புறத்திலும், பயணிக்கும் கிராமங்களிலும் நான் நேரடியாக பார்த்தவற்றின் அடிப்படையில் பெண்களுக்கான திட்டங்களை வகுக்கிறேன். பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வாயிலாக, பெண்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர்.தங்கள் குடும்ப நலன் குறித்து மட்டுமே கவலைப்படும் அரசியல் தலைவர்களால் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது.பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தும் சமூகம் மட்டுமே முன்னேறி செல்லும். மூன்றாவது முறையாக நாங்கள் அமைக்கவுள்ள ஆட்சி, பெண்கள் சக்தியின் எழுச்சியில் புதிய அத்தியாயத்தை எழுதும்.இவ்வாறு அவர் பேசினார்.
துவாரகா விரைவுச்சாலை திறப்பு!
டில்லியில் இருந்து ஹரியானாவின் குருகிராம் வரையில், 9,000 கோடி ரூபாய் செலவில் துவாரகா எட்டு வழி விரைவுச்சாலை கட்டப்பட்டுள்ளது. ஹரியானா பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 19 கி.மீ., துார விரைவு சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தரைமட்டத்தில் இருந்து உயர்த்தி கட்டப்பட்ட நாட்டின் முதல் விரைவுச்சாலை என்ற பெருமையை துவாராக விரைவுச்சாலை பெற்றுள்ளது. ''இந்த விரைவுச்சாலை முழுமையாக திறக்கப்பட்டவுடன், டில்லி - ஹரியானா இடையிலான போக்குவரத்து புதிய மாற்றத்தை காணும்,'' என, பிரதமர் தெரிவித்தார். இந்த விரைவுச்சாலை குருகிராம் புறவழிச்சாலையிலிருந்தும், டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் நேரடியாக செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலங்கள், சுரங்க பாதைகள், குகை பாதை, மேம்பாலம், உயர்மட்ட மேம்பாலம் என, பல கட்டமைப்புகளில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.