துாய்மை இந்தியாவால் நாட்டின் செழிப்புக்கு... புதிய பாதை! உலகின் பெரிய இயக்கம் என மோடி பெருமிதம்
புதுடில்லி, ''நாடு செழுமை அடைவதற்கு, துாய்மை இந்தியா திட்டம் புதிய பாதையை வகுத்து தந்துள்ளது. 21ம் நுாற்றாண்டில் உலகின் மிகவும் வெற்றிகரமான மிகப் பெரும் இயக்கமாக இது அமைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், துாய்மைப் பணிகள் தொடர்பான, 10,000 கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:அடுத்த 1,000 ஆண்டுக்குப் பின்னும், 21ம் நுாற்றாண்டில் இந்தியா குறித்து பேசப்படும்போது, துாய்மை இந்தியா திட்டம் நிச்சயம் நினைவில் வரும்.திட்டத்தின் பலன்இந்த 21ம் நுாற்றாண்டில் உலகின் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக இது அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.இந்த திட்டத்தின் வெற்றி ஒவ்வொருவரின் வெற்றியாகும். கடந்த, 15 நாட்களில் நாடு முழுதும், 27 லட்சம் துாய்மை இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன; 28 கோடி மக்கள் பங்கேற்றனர்.பொது சுகாதாரம் மற்றும் செழிப்புக்கு புதிய பாதையை இந்த திட்டம் வகுத்து தந்துள்ளது.முந்தைய ஆட்சியின்போது, துாய்மைப் பணி, கழிப்பறைஆகியவை ஒரு தேசிய பிரச்னையாக பார்க்கப்படவில்லை. ஒரு பிரதமரின் முதல் வேலை, சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை சுலபமாக்குவதுதான். கழிப்பறைகள், குப்பைகள், துாய்மை குறித்து நான் பேசியபோது கேலி செய்தனர். தற்போது அந்த திட்டத்தின் பலன்களை கண்கூடாக மக்கள் பார்க்கின்றனர்.நாட்டில், 10 ஆண்டுகளுக்கு முன், 60 சதவீத மக்கள் பொது இடங்களை அசுத்தப்படுத்தி வந்தனர். இது, தலித், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களை இழிவுபடுத்துவதாகும். மேலும் பெண்களின் கண்ணியத்துக்கும் எதிரானது.வாழ்நாள் ஒழுக்கம்சர்வதேச ஆய்வுகளின்படி, துாய்மை இந்தியா திட்டத்தால், ஆண்டுக்கு, 70,000 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டப்பட்டதால், 90 சதவீத பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, 2014ல் இருந்து, 2019க்குள், வயிற்றுபோக்கால் மூன்று லட்சம் பேர் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது.மேலும் துாய்மை இந்தியா திட்டம், துாய்மைப் பணியாளர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. துாய்மை என்பது ஒரு நாள் மட்டும் செய்வதல்ல. அதை,வாழ்நாள் ஒழுக்கமாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
சாண எரிவாயு மையங்கள்!
துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமங்களில் சாண எரிவாயு மையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆயில் இந்தியா என்ற பொதுத் துறை நிறுவனம் வாயிலாக, நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில், சாண எரிவாயு உருவாக்கும் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இவற்றை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:மாட்டு சாணம் கிராமங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுதும் தற்போது நுாற்றுக்கணக்காண சாண எரிவாயு மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் சாணங்கள், கிராம மக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்தன. அவற்றை சுத்தப்படுத்துவதும், அகற்றுவதும் சிரமமாக இருந்தன. மேலும், பால் சுரக்காத மாடுகள் சுமையாக இருந்தன. தற்போது, சாண எரிவாயு மையங்கள் அமைந்துள்ளதால், சாணத்தின் வாயிலாகவும் கிராம மக்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. பால் சுரப்பது நின்ற மாடுகள், சாணத்தை அளிப்பதால், அவற்றை அழிப்பதும் குறைந்துள்ளது.இதைவிட, சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவுக்கு குறைந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய பெட்ரோலியத் துறையுடன் இணைந்து, ஆயில் இந்தியா நிறுவனம், இந்த நிதியாண்டில், 25 சாண எரிவாயு மையங்களை அமைக்கவுள்ளது.
ரூ.83,700 கோடி நலத்திட்டங்கள்
துவக்கி வைத்த பிரதமர் மோடிபழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக 79,150 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி நேற்று ஜார்க்கண்டில் துவக்கி வைத்தார். சமூக போராளியான பிர்சா முண்டாவின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பிரதமரின் ஆதிவாசி நியாய மஹா திட்டத்தின் வாயிலாக, 1,360 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.