உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் முன் நடனமாடி ஆச்சரியப்படுத்தும் மயில்

மக்கள் முன் நடனமாடி ஆச்சரியப்படுத்தும் மயில்

ராய்ச்சூர்; கிராமத்தினரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மயில், தினமும் ஊருக்குள் வந்து மக்களின் முன்னால் நடனமாடி மகிழ்விக்கிறது. ராய்ச்சூர், சிரவாராவின், கட்டோனி திம்மாபுரா கிராமம், மலை குன்றுகள், வனம் மற்றும் விளை நிலங்களுக்கு இடையே அமைந்துள்ள சிறிய கிராமமாகும். வனப்பகுதியில் மயில்கள் அதிகம் வசிக்கின்றன. அவ்வப்போது வயலுக்கு வந்து, பயிர்களை சாப்பிடுவதும், மெய் மறந்து நடனமாடுவதும் வழக்கம்.மக்கள் நடமாட்டம் தென்பட்டால், பயந்து வனப்பகுதியில் ஓடி மறையும். ஆனால் ஒரு மயில் மட்டும், பயந்து ஓடாமல் தோகையை விரித்து நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன், குட்டி மயில் ஒன்று எதிர்பாராமல் வனப்பகுதியில் இருந்து, கட்டோனி திம்மாபுரா கிராமத்துக்குள் வந்தது. இதற்கு நாய்கள், சிறுவர்கள், பூனைகள் தொந்தரவு கொடுத்தன. இதை கண்ட குருபாதப்பா நாயக், சில நாட்கள் மயிலை தன் வீட்டில் வைத்து பாதுகாத்தார். சோளம், அரிசி தீவனம் கொடுத்தார். அதன்பின் மயில் வனப்பகுதிக்கு சென்றது என்றாலும், குருபாதப்பா நாயக்கை மறக்கவில்லை. அவ்வப்போது அவரது வீட்டுக்கு வந்து, தீவனம் தின்று சிறிது நேரம் தோகையை விரித்து நடனமாடிவிட்டு வனத்துக்கு செல்கிறது. இதை கண்டு ஆச்சரியமடைந்த கிராமத்தினரும், உணவு தானியங்களை அளிக்கின்றனர்.தற்போது தினமும் காலை, மாலையில் கிராமத்துக்கு வரும் மயில், மக்களின் முன்னால் நடனமாடி மகிழ்விக்கிறது. நாய்கள், பூனைகள், சிறுவர்களால் தொந்தரவு ஏற்படாமல் பார்த்து கொள்கின்றனர். இதனால் மயில் சுதந்திரமாக நடனமாடிவிட்டு, வனத்துக்கு செல்கிறது. கிராமத்துக்கு புதிதாக வரும் பலரும், மயிலின் நாட்டியத்தை கண்டு வியப்படைகின்றனர். தங்கள் மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை