உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழகு மலர் ஆட... அபிநயங்கள் கூடும் பரதநாட்டியம் கலாசாரத்தை கண் போல ஊக்குவிக்கும் தமிழ் பெண்

அழகு மலர் ஆட... அபிநயங்கள் கூடும் பரதநாட்டியம் கலாசாரத்தை கண் போல ஊக்குவிக்கும் தமிழ் பெண்

கர்நாடகாவில் அண்டை மாநிலமான, தமிழகத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் தமிழகத்தின் பராம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகை அன்று குடும்பமாக சேர்ந்து பொங்கலிடுவது, தீபாவளி கொண்டாடுவது என்று, நமது பண்பாட்டை மறக்காமல் உள்ளனர்.பெற்றோரின் பூர்விகம் தமிழகமாக இருந்தால், அவர்களின் குழந்தைகள் கர்நாடகாவில் பிறக்கும் போது, தமிழ் எழுத, படிக்க தெரிவது இல்லை. ஆனால் நன்றாக பேசுகின்றனர். தமிழை எழுத, படிக்க தமிழ் ஆர்வலர்கள் உதவி வருகின்றனர். இதுபோன்று தமிழக கலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக, தமிழ் பெண் ஒருவர் பரதநாட்டியம் சொல்லி தருகிறார்.பெங்களூரு டானரி சாலையில் வசிப்பவர் கோவலன். இவரது மனைவி மனோ கார்த்தாயினி. பூர்விகம் தங்கவயல் என்றாலும், இவர்களின் முன்னோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கோவலன் - மனோ கார்த்தாயினியின் மகள் சாரிகா பாரதி. பி.ஏ., படித்த பின், தற்போது, பி.எட்., படித்து வருகிறார்.

தமிழ் கலாசாரம்

இவர் தான் தமிழ் கலாசாரத்தை ஊக்குவிக்க, தனது வீட்டின் பக்கத்து வீடுகளில் வசிக்கும், சிறுமியருக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கிறார். இதற்காக குறைந்த கட்டணமே வாங்குகிறார்.இதுகுறித்து சரிகா பாரதி கூறியதாவது:நான் 4 வயது சிறுமியாக இருந்தபோது, எனது பெற்றோர் என்னை பரதநாட்டிய வகுப்பில் சேர்த்துவிட்டனர். அந்த வயதில் எனக்கு பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தமிழ் குடும்பங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும், பரதநாட்டியம் ஆடி உள்ளேன். எனது வீட்டின் அருகில் வசிக்கும், சிறுவர், சிறுமியர்களுக்கும் தமிழர் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், பரதநாட்டியம் சொல்லித் தர வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.

பெற்றோர் உதவி

அவர்களுக்கு என்னிடம் பரதநாட்டியம் ஆடுவது குறித்து, அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பர். இதனால் அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் கூட, பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில், என்னிடம் பரதநாட்டியம் கற்ற சிறுமியர் நடனம் ஆடினார். அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டினர். என்னிடம் பரதநாட்டியம் கற்பவர்களிடம் குறைந்த கட்டணமே வாங்குகிறேன். பரதநாட்டியம் நமது கலாசாரம். அதை ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். எனது குறிக்கோளுக்கு பெற்றோர் மிகவும் உதவியாக இருக்கின்றனர். பரதநாட்டிய வகுப்பு நடத்தவே, வீட்டின் அருகே ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளனர். வீட்டில் நேரம் கிடைக்கும் போது, ஓவியங்கள் வரைகிறேன். நாளிதழ்களை வைத்து வித்தியாசமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். நாளிதழ்களை பயன்படுத்தி சைக்கிள் மாதிரி வடிவமைத்து உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை