உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நுால் நுாற்று அசத்திய மூதாட்டி

நுால் நுாற்று அசத்திய மூதாட்டி

காங்கிரஸ் நுாற்றாண்டு மாநாட்டை முன்னிட்டு, காந்தி தொடர்பான கதர் மேளா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மூதாட்டி ஒருவர் ராட்டையில் நுால் நுாற்று அனைவரையும் கவர்ந்தார்.சுதந்திரத்துக்கு முன், 1924ல் பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில், மகாத்மா காந்தி, கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாடு நடந்து நுாறாண்டு நிறைவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில், பெலகாவியில் நாளை காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது.பெலகாவியின் சர்தார்ஸ் மைதானத்தில், காதி உற்சவம், ராட்டை மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலரும் தங்களின் திறமையை காண்பிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் மேளாவை காண வருகின்றனர். நேற்று ஞாயிறு என்பதால், மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்தது.பெலகாவியின், ஹுதலி கிராமத்தில் வசிக்கும் சுவர்ணா, 65, என்ற மூதாட்டி ராட்டையில் அதிவேகமாக நுால் நுாற்று, மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெரிய மேடையில் அமர்ந்து நுால் நுாற்பதை சிறுவர் முதல், பெரியவர் வரை ஆர்வத்துடன் பார்த்தனர். பலரும் தங்கள் மொபைல் போனில் போட்டோ, வீடியோ பதிவு செய்தனர். சிறார்கள் ராட்டை என்றால் என்ன, எப்படி நுால் நுாற்கின்றனர் என, ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டனர். மூதாட்டியும் அவர்களுக்கு விவரித்தார். மூதாட்டி சுவர்ணா கூறியதாவது:மகாத்மா காந்தி 1937ல், எங்களின் ஹுதலி கிராமத்திற்கு வந்தார். அதன்பின் இந்த ஊரின் வடிவமே மாறியது. காந்தியின் உந்துதலால், மக்கள் கதராடை நெய்வதில் ஆர்வம் காட்டினர். பலருக்கும் இதுவே தொழிலாக மாறியது.தற்போது தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கதர் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில், நுால் நுாற்கும் பணி செய்கின்றனர். இவர்களுக்கு குறைந்த ஊதியமே கிடைக்கிறது. இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !