தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற தமிழ் மரபு விளையாட்டில் காதல் கொண்ட பெண்
பெங்களூரு: தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், ஐ.டி., வேலையை உதறிவிட்டு, தமிழ் மரபு விளையாட்டை ஒரு பெண் முன்னெடுத்து வருகிறார்.பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவின், ஒரு அரங்கில் வைக்கப்பட்டு உள்ள பொருட்களை, மக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமியர் அங்கு அதிகம் காணப்படுகின்றனர். அது என்ன அரங்கு என்று சென்று பார்த்தால், தமிழ் மரபு விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் இடம்.இந்த அரங்கை இம்மாகுலெட் அந்தோணி என்ற பெண் அமைத்துள்ளார். தன் அரங்கிற்கு வருவோரிடம், தமிழ் மரபு விளையாட்டுக்கள் பற்றி எடுத்துக் கூறுகிறார். விளையாட தெரியாதவர்களுக்கு விளையாடவும் சொல்லி தருகிறார். ஐ.டி., ஊழியர்
இதுகுறித்து அவர் உணர்வுப்பூர்வமாக கூறியதாவது:பெங்களூரு விப்ரோ, புனேயின் ஜென்சர், பெங்களூரு ஓசூர் ரோட்டில் உள்ள என்சர் ஆகிய, மூன்று ஐ.டி., நிறுவனங்களில், 1997 முதல் 2017 வரை வேலை செய்தேன். கடைசியாக என்சரில் வேலை செய்யும்போது, மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் கிடைத்தது.என் தந்தை ஆரோக்கியசாமிக்கு, தமிழ் மரபு வழி விளையாட்டு மீது ஆர்வம் அதிகம். எனக்கு இருந்தது இல்லை. இதனால் அவர் என்னை நினைத்து கவலைப்பட்டார். என்னுடன் இணைந்து விளையாட பல்லாங்குழி வாங்கி வைத்து இருந்தார்.அதுபற்றி எனக்கு தெரியாது. 2017ம் ஆண்டு அவர் இறந்த பின் தான், பல்லாங்குழி வாங்கி வைத்திருந்தது, எனக்கு தெரிய வந்தது. இதுபற்றி என்னிடம் குடும்பத்தினர் கூறியபோது, மனஅழுத்ததிற்கு ஆளானேன்.ஐ.டி., வேலையை விட்டுவிட்டு, வீட்டில் சும்மா இருந்தேன். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும், தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றவும், தமிழ் மரபு விளையாட்டுகளை மக்களுக்கு குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தேன். 'ஹள்ளி ஹப்பா'
தமிழ் மரபு விளையாட்டுப் பொருட்களை வாங்கினேன். பெங்களூரில் ஒரு பள்ளிக்கு சென்று, மரபு விளையாட்டுகளை விளையாட, மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று கேட்டேன். அதற்கு கட்டணமாக 5,000 ரூபாய் நான் செலுத்தினேன்.தினமும் கடைசி ஒரு மணி நேரம், மாணவர்களுக்கு விளையாட சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.மாணவர்களின் விளையாட்டை பார்த்து, பெற்றோரும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.விளையாட்டுகள் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி விளையாடப்படும்.பள்ளிகள் படிக்கும் மாணவர்கள் பெற்றோர் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவராக இருப்பர். அவர்களின் ஆலோசனையையும் நாங்கள் எடுத்து கொண்டோம். முதலில் 10 விளையாட்டுகளுடன் ஆரம்பித்தோம். ஒரு மாணவரின் பெற்றோர் உதவியுடன், 'ஹள்ளி ஹப்பா' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா நேரத்தில் அருங்காட்சியங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதி இருந்தது. அதனை பயன்படுத்தி தமிழ் மரபு விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொண்டேன். இதுவரை 150 மரபு வழி விளையாட்டு பற்றி கண்டறிந்து உள்ளேன். அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்கள் அரங்கில் பம்பரம், கோலி, கில்லிதண்டு, உண்டி வில் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் உள்ளன. வேப்ப மரம்
பல்லாங்குழியில் சீதாபாண்டி, ராஜபாண்டி, காசிபாண்டி, பிள்ளைகுழி, எதிர்பாண்டி உட்பட 35 வகைகளும்; தாயத்தில் விமான தாயம், சிலுவை தாயம், அஞ்சுவீடு, ஏழுவீடு, அறுவடை தாயம் என 25 வகைகளும் உள்ளன.பல்லாங்குழி உள்ளிட் மரச்சாமான் விளையாட்டுப் பொருட்களை, வேப்பமரம், கருவேலமரம், தைலமரத்தில் இருந்து செய்கிறோம். மதுரையில் இருந்து இங்கு கொண்டு வருகிறோம். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சென்னப்பட்டணாவில் இருந்து வாங்கி வருகிறோம்.மரபு விளையாட்டுகள் பற்றி என் சமூக வலைத்தள பக்கமாக ஐமாரீகிரியேஷனில் சென்று பார்க்கலாம். இது தொடர்பாக, மொபைல் நம்பர்: 99869 91228 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கூறினார்.பட விளக்கம்26 12 2024 blr ph 6தன் அரங்கிற்கு வந்த சிறுவர், சிறுமியருக்கு தாயம் விளையாட சொல்லிக் கொடுத்த இம்மாகுலெட் அந்தோணி.