மேலும் செய்திகள்
கோவா மாநிலத்தில் 2 நாள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்
29-Sep-2025
சண்டிகர்:பஞ்சாபில், ராஜ்யசபா எம்.பி.,க்கான இடைத்தேர்தலில், பிரபல தொழிலதிபர் ராஜிந்தர் குப்தா, ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்த ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சீர் அரோரா, லுாதியானா சட்டசபை தொகுதிக்கு ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநில அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். அவர் ராஜினாமா செய்த ராஜ்யசபா எம்.பி.,க்கான காலியிடத்துக்கு வரும் 24ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. முற்றுப்புள்ளி இந்நிலையில், ராஜ்யசபா இடைத்தேர்தலில் பிரபல தொழிலதிபர் ராஜிந்தர் குப்தா, 66, ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவார் என, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக பார்லிமென்ட்டுக்குள் நுழைவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 93 பேர் இருப்பதால், அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆம் ஆத்மியை எதிர்த்து மற்ற கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என எதிர்பார்க்கப் படுகிறது. ராஜ்யசபா எம்.பி.,க்கான இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி 13ம் தேதி நிறைவடைகிறது. அக். 14ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ் பெற 16ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு 24ம் தேதி நடத்தப்பட்டு அன்றே முடிவும் அறிவிக்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர் 2028ம் தேதி ஏப்., 9ம் தேதி வரை ராஜ்யசபா எம்.பி., பதவி வகிப்பார். லுாதியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிரைடென்ட் குழுமம் பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஜவுளி, காகிதம் மற்றும் ரசாயணம் ஆலைகளை நடத்தி வருகிறது. ராஜினாமா இந்நிறுவனத்தின் கவுரவ தலைவரான ராஜிந்தர் குப்தா, தான் வகித்து வந்த மாநில பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல் வாரிய துணைத் தலைவர் மற்றும் காளிதேவி கோவில் ஆலோசனைக் குழு தலைவர் ஆகிய பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அப்போதே, ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என யூகிக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக 2007ம் பத்மஸ்ரீ விருது பெற்றார். பஞ்சாபில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்திலும் குப்தா அரசு பதவிகளை வகித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் இருந்து பல்பீர் சிங் சீசெவால், ராகவ் சத்தா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், அசோக் மிட்டல் மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகிய ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். ராஜிந்தர் குப்தா,வெற்றி பெற்றால் எண்ணிக்கை ஏழாக உயரும். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட ஏராளமானோர் குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
29-Sep-2025