உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நிதி உதவி செய்கிறது ஆம் ஆத்மி

டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் நிதி உதவி செய்கிறது ஆம் ஆத்மி

புதுடில்லி:டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்பும், ஆனால் செலவு செய்ய இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் நிதியுதவி உட்பட அனைத்து ஆதரவும் அளிக்கும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநிலத் தலைவர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது: டில்லி பல்கலை மாணவர் சங்கத்தில் பண பலத்தை முடிவுக்கு கொண்டு வருவதே ஆம் ஆத்மியின் நோக்கம். ஒரு மாணவருக்கு ஜனநாயக வழியில் வெற்றி பெற திறமை இருந்தும், தேர்தல் செலவுக்கு தேவைப்படும் பணம் இல்லாததால் பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறார். இதுபோன்ற மாணவர்களை தகுதி அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சியின், மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம் ஆதரிக்கும். அவர்களுக்கு தேவையான தேர்தல் செலவுகளை செய்து, தேர்தலில் ஆதரவு அளிக்கும். இதற்கான விண்ணப்பங்களை வரும், 25ம் தேதி வரை வழங்கலாம். கல்லுாரி மாணவர்களை இலவச சினிமா டிக்கெட் மற்றும் ஆடம்பர விருந்து ஆகியவற்றால் அழிக்காமல் பாதுகாப்பதே ஆம் ஆத்மியின் நோக்கம் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரை, குறைந்தபட்சம் ஐந்து கல்லுாரிகளில் இருந்து 50 பேர் முன்மொழிய வேண்டும். மேலும், கல்லூரி அளவிலான வேட்பாளர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்லுாரியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். மேலும், ஒரு நிமிட வீடியோ மற்றும் 200 முதல் 500 வார்த்தைகள் கொண்ட கொள்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சங்கத் தேர்தல்கள் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் முதல் நேரடி அனுபவம். இதுதான், அவர்களின் எதிர்கால அரசியல் கலாசாரத்தை வடிவமைக்கின்றன. ஆனால் இன்று, மாணவர் சங்கத் தேர்தலுக்கே சொகுசு கார்கள், ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதில் இருந்துதான் அரசியல் ஊழல் துவங்குகிறது. இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சஞ்சீவ் ஜா கூறுகையில், “இது ஒரு துவக்கம். தலைமைத்துவ திறன், பேச்சுத்திறன் மற்றும் தகுதி ஆகியவற்றை அளவுகோலாக வைத்து ஆம் ஆத்மியின், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சுத்தமான அரசியலை விரும்பினால், அது கல்லுாரிகளில் இருந்துதான் துவக்க வேண்டும்,”என்றார். டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை மறுநாளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indhuindian
ஆக 17, 2025 04:48

கஷுதை தேஞ்சு கட்டெறும்பாச்சும்பாங்க அந்த மாதிரி டெல்லி மாநிலத்தை ஆண்டு, பஞ்சாபை ஆண்டு கொண்டு, மோடிக்கு எதுரா வாரணாசியிலே போட்டி போட்டு இப்போ எல்லாம் போயி இப்போ ஸ்கூல் எலெக்க்ஷனுக்கு வந்துட்டாங்க பாத்துகிட்டே இருக்கிங்க எங்கேயாவது ஒரு குக்கிராமத்தை தேடி கண்டு புடிச்சு அங்கே ஓவர் வார்டு கவுன்சிலர் ஆகமா விடமாட்டாங்க நானும் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேங்கறமாதிரி நாங்களும் அரசியல்ல இருக்கோம் அரசியல்ல இருக்கோம்னு காண்பிக்க. வேண்டாமா. மத்தவங்க முப்பது நாப்பது வருஷத்துல அடிச்சதை இந்த கட்சி அதுவும் ஒன்னு ரெண்டு பேர் வஷியா வருஷத்துலேயே வருஷத்துலயா அடிச்சுட்டாங்க அது பெரிய சாதனை இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை