ஹிந்துக்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி! பா.ஜ., வெற்றியை பாதிக்குமா?
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலில், இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகள், மத அமைப்புகளை கவரவும் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.டில்லி சட்டசபை தேர்தல் பிப்.,5ல் நடக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி, 'ஹாட்ரிக்' சாதனை படைக்க திட்டமிட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி, அனைத்து தொகுதிகளிலும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தாராள வாக்குறுதிகளையும் வாரி வழங்குகிறது. அதில், கோவில் பூஜாரி மற்றும் சீக்கிய குருத்வாரா கிரந்திகளுக்கு மாதந்தோறும் 18,000 ரூபாய் நிதியுதவி என்ற வாக்குறுதி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.ஆம் ஆத்மியின் இந்த வாக்குறுதி, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.,வுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ஆரம்ப காலத்தில் இலவசம் வழங்கும் திட்டங்களை விமர்சித்த, பா.ஜ.,வும் டில்லி தேர்தல் வாக்குறுதியில் இலவச அறிவிப்புகளை பொழிந்துள்ளது.கோவில், குருத்வாரா வழிபாட்டுத் தலங்களுக்கு மாதந்தோறும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது.ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வாக்குறுதி வலையை வீசி தேர்தல் களத்தில் ஓட்டுக்களை சேகரிக்க முயன்று வருகின்றன.இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் மதம் சார்ந்த போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இது, ஹிந்து ஆதரவு கட்சி எனக்கூறும் பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.அரவிந்த் கெஜ்ரிவால், வால்மீகி மற்றும் ஹனுமன் கோவில்களில் பிரார்த்தனை செய்த பிறகே புதுடில்லி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் சமீபகாலமாக தன்னை ஹனுமன் பக்தராக வெளிப்படுத்திக் கொள்கிறார். அதேபோல, முதல்வர் ஆதிஷி சிங் கல்காஜி கோவில் மற்றும் குருத்வாராவில் பிரார்த்தனை செய்துவிட்டே வேட்புமனுவை தாக்கல் செய்தார்.முன்னள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், ஜங்புரா தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், ஜம்மு வைஷ்ணவி தேவி உட்பட பல முக்கியக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். மேலும், கிலோகாரி அங்குரி தேவி மந்திரில் ஹனுமன் சாலிசா பாராயணம் செய்து விட்டே சிசோடியா ஜங்புராவில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்.தலைவர்களின் இந்த பிரார்த்தனைகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், பா.ஜ., மட்டுமே ஹிந்துக்களுக்கான கட்சி என்ற பிம்பமும் உடைந்து கொண்டே வருகிறது.