சித்ரதுர்கா: ''கோவிலில் ஜாதி பாகுபாட்டால், கருவறை அருகில் செல்ல என்னை அனுமதிக்கவில்லை,'' என, குருப சமூக மடாதிபதி ஈஸ்வரானந்தபுரி சுவாமி, 'பகீர்' குற்றச்சாட்டு கூறியுள்ளார்.சித்ரதுர்கா ஹொசதுர்கா சனேஹள்ளி கிராமத்தில், கன்னட இலக்கிய மாநாடு நேற்று நடந்தது. இம்மாநாட்டில் கனக பீட மடத்தின் மடாதிபதி ஈஸ்வரானந்தபுரி சுவாமி பேசியதாவது:கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று, ஹொசதுர்கா அருகில் பாகூர் கிராமத்தில் உள்ள சென்னகேசவா கோவிலுக்கு, நான் உட்பட சில மடாதிபதிகள் சென்றோம். ஜாதி பாகுபாட்டால், கோவில் கருவறை அருகில் என்னையும், என்னுடன் வந்த மடாதிபதிகளையும், கோவில் அர்ச்சகர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் அர்ச்சகர்கள் குடும்பத்தினர் மட்டும், கருவறையின் அருகில் நின்று, சாமி தரிசனம் செய்தனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னகேசவா கோவிலுக்குச் சென்றேன். நான் சென்று வந்த பின்னர், அந்த கோவில் முழுவதையும் சுத்தம் செய்தனர் என்று, பக்தர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அப்போது அந்த கோவில், அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று தெரியாது. அதன்பின்னர் தான் தெரியவந்தது. இனி சென்னகேசவா கோவிலுக்கு செல்ல மாட்டேன். நாட்டில் இன்னும் தீண்டாமை இருப்பது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டபோது, ''மடாதிபதி ஈஸ்வரானந்தபுரி கூறிய குற்றச்சாட்டு பற்றி, எனக்கு தெரியாது. இதனால் அதுபற்றி பேச மாட்டேன்,'' என்றார்.மடாதிபதி குற்றச்சாட்டு குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். மடாதிபதிக்கு கோவிலில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதல்வர் சித்தராமையா குருபா சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.