அப்துல்லா இரு இடங்களில் வெற்றி ஜமாத், ஆசாத், மெஹபூபா தோல்வி
ஜம்மு,ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இன்ஜினியர் ரஷீத்தின் ஜமாத் கட்சி, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் கட்சி, முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோரை மக்கள் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்துள்ளனர்.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்தது. ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பா.ஜ., தனித்து போட்டியிட்டது. முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனித்து போட்டியிட்டார். லோக்சபா எம்.பி.,யான இன்ஜினியர் ரஷீத் மற்றும் காங்.,கில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்கிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த தேர்தலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவர் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கடைசியில் புஸ்வாணமானது. பயங்கரவாத வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இன்ஜினியர் ரஷீத், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அவாமி இதேஹாத் கட்சி சார்பில் சிறையில் இருந்தபடி போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்தார்.சிறையில் இருந்து வெளி வந்த பின், ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியில் சேர்ந்தார். இந்த கட்சி ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால், அக்கட்சியை சேர்ந்த பலர் சுயேச்சையாக போட்டியிட்டனர்.இதில், ரஷீத் ஆதரவு பெற்ற குர்ஷித் அகமது ஷேக் என்பவர் மட்டும் லங்கேட் தொகுதியில் வெற்றி பெற்றார். காங்.,கில் இருந்து வெளியேறி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை துவங்கிய குலாம் நபி ஆசாத், தன் கட்சி சார்பில் மூன்று இடங்களில் போட்டியிட்டார். அவரது தொடர்ச்சி 16ம் பக்கம்
ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., முதலிடம்
ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும், அதிக ஓட்டுகள் பெற்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பா.ஜ., சார்பில் 62 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜம்முவில் 43, காஷ்மீரில் 19 பேர் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 25.64 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. ஜம்முவில் மட்டும் 45.4 சதவீத ஓட்டுகளை அள்ளியுள்ளது. ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., முதலிடத்தை பிடித்து உள்ளது. ஆட்சி அமைக்கவுள்ள தேசிய மாநாட்டு கட்சி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், 23.42 சதவீத ஓட்டு களை மட்டுமே பெற்றுள்ளது. காங்., 11.97 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.