டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி., அபார வெற்றி துணைத் தலைவர் பதவியை மட்டும் காங்., அமைப்பு கைப்பற்றியது
புதுடில்லி:டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்கின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைவர் உட்பட மூன்று முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியது. துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் தேர்வு பெற்றுள்ளது. இடதுசாரி அமைப்புகள் எந்தப் பதவிக்கும் தேர்வு பெறவில்லை. ஆர்யன் தேசிய அரசியலுக்கு ஒரு படிக்கல் போல திகழும், டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன் தினம் நடந்தது. காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 3:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை என, இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 2.75 லட்சம் வாக்காளர்களில் 39.45 சதவீத மாணவர்களே ஓட்டுப் போட்டிருந்தனர். டில்லி பல்கலையின் வடக்கு வளாக விளையாட்டு மையத்தில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு ஏ.பி.வி.பி., சார்பில் களம் இறங்கியிருந்த ஆர்யன் மான் 28,841 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.எஸ்.யு.ஐ., வேட்பாளர் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரி 12,645 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றிருந்தார். அதேநேரத்தில் துணைத் தலைவர் பதவிக்கு என்.எஸ்.யு.ஐ., சார்பில் போட்டியிட்ட ராகுல் ஜான்ஸ்லா 29,339 ஓட்டுக்களைப் பெற்று ஏ.பி.வி.பி., வேட்பாளர் கோவிந்த் தன்வாரை தோற்கடித்தார். கோவிந்த் 20,547 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். இடது சாரி செயலர் பதவியை ஏ.பி.வி.பி.,யின் குணால் சவுத்ரி - 23,779 ஓட்டுக்களுடன் கைப்பற்றினார். அதேபோல, ஏ.பி.வி.பி., சார்பில் களம் இறங்கி இணைச் செயலர் பதவியை தீபிகா ஜா - 21,825 ஓட்டுக்களுடன் கைப்பற்றினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பதானா 17,380 ஓட்டுக்களே பெற்றிருந்தார். இடதுசாரி அமைப்புகளான எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஏ.ஐ.எஸ்.ஐ., எனப்படும் அகில இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து களம் இறங்கியும் ஒரு பதவியைக் கூட கைப்பற்றவில்லை. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தலைவர் உட்பட மூன்று முக்கியப் பதவிகளைம் இந்திய தேசிய மாணவர் சங்கம் வென்றது. துணைத் தலைவர் பதவியை மட்டும் ஏ.பி.வி.பி., வென்றது. இந்த ஆண்டு அதுவே தலை கீழாக மாறியுள்ளது. டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யன் மான் கூறியதாவது: பல்கலை மாணவர்களுக்கு மெட்ரோ ரயிலில் சலுகைக் கட்டண பாஸ் என்றா வாக்குறுதியை நிறைவேற்றுவதே எனது முதல் கடமையாக இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கு போதுமான பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வோம். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த வெற்றி ஊர்வலமும் நடத்தவில்லை. செய்ய வேண்டிய பணிகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகச் செய்வோம். டில்லி பல்கலை மாணவர் சங்கம் 1949ம் ஆண்டு துவக்கப்பட்டு, 1954ம் ஆண்டு முதல் தேர்தல் நடக்கிறது. மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, அஜய் மக்கான் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., அல்கா லம்பா மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா உட்பட பலர் டில்லி மாணவர் சங்கத் தலைவர் பதவி வகித்துள்ளனர். ஏ.பி.வி.பி., சார்பில் 2015- - 2016ல் - கடந்த சதேந்திர அவானா, அமித் தன்வார் - 2016 - 20-17, அங்கிவ் பைசோயா - 2018- - 2019, சக்தி சிங் - 2018- - 2019, அக் ஷித் தஹியா - 2019 - -23, துஷார் தேதா - 2023- - 2024 ஆகியோர் டில்லி மாணவர் சங்கத் தலைவர் பதவி வகித்துள்ளனர். போலி பட்டப்படிப்பு சர்ச்சையில் சிக்கியதால் ஏ.பி.வி.பி.,யில் இருந்து பைசோயா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், சக்தி சிங் தலைவர் பொறுப்பை ஏற்றார். கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரை தேர்தல் நடத்தப் படவில்லை.
தேசத்துக்கு முன்னுரிமை
மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான ஜெ.பி.நட்டா கூறியதாவது: தேசத்துக்கு முன்னுரிமை என்ற சித்தாந்தத்தை இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர் என்பதையே டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் பிரதிபலித்துள்ளது. சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் ஏ.பி.வி.பி., எப்போதும் இளைஞர்களை தேசிய உணர்வுடனும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடனும் வளர்த்தெடுக்கிறது. இளைஞர்கள் நம் நாட்டை பிரகாசமான மற்றும் வலுவான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றுமையின் பாதை
டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் அற்புதமான வெற்றியை ஈட்டிய அனைத்து இளம் தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி ஒரு அமைப்பின் வெற்றி மட்டுமல்ல. தேசபக்தி, ஒழுக்கம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுக்கு கிடைத வெற்றி. டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவராக நானும் பதவி வகித்துதான் இன்று டில்லி முதல்வர் என்ற நிலையை அடைந்துள்ளேன். அறிவு, பணிவு மற்றும் ஒற்றுமையின் பாதையில் இளைஞர் கள் உறுதியாக இருப்பதை இந்த வெற்றி காட்டுகிறது . --ரேகா குப்தா, டில்லி முதல்வர்.
போராட்டம் தொடரும்
என்.எஸ்.யு.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்க தேசியத் தலைவர் வருண் சவுத்ரி கூறியதாவது: எங்கள் போராட்டம் ஏ.பி.வி.பி.,க்கு எதிரானது மட்டுமல்ல. டில்லி பல்கலை நிர்வாகம், டில்லி அரசு, மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., மற்றும் டில்லி போலீசுக்கு எதிராகவும் மாணவர் நலன் கருதி தொடர்ந்து போராடுவோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் காங்கிரஸின் மாணவர் அமைப்பை ஆதரித்துள்ளனர். வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், இந்திய தேசிய மாணவர் சங்கம் எப்போதும் அனைத்து மாணவர்களின் நலனுக்காகவும் போராடும். இவ்வாறு அவர் கூறினார்.