உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிர்க்கழிவு எரிப்புக்கான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்!

பயிர்க்கழிவு எரிப்புக்கான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், பயிர்க்கழிவு எரிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்காததற்காக, மத்திய மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. வெறும் கண்துடைப்பு நாடகம் நடத்துவதாகவும், அரசியல் காரணங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.உலக அளவில் அதிக மாசுள்ள நகரங்களில் இரண்டாவது இடத்தில் டில்லி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் துவங்குவதற்கு முன், அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்டவற்றில், விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதே, டில்லியின் மோசமான காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.இதைத் தடுக்கும் வகையில், சி.ஏ.க்யூ.எம்., எனப்படும் காற்று தர நிர்வாக கமிஷன், 2021, ஜூன், 10ல் பல உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

மெத்தனம்

இருப்பினும், டில்லியில் காற்று மாசு மிகவும் மோசமான கட்டத்தில் தற்போது உள்ளது. இது தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் அபய் ஓகா, அசானுதீன் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின்போது, பயிர்க்கழிவு எரிப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முறையான தகவல்களை அளிக்காததால், ஹரியானா மற்றும் பஞ்சாபின் தலைமைச் செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.அதன்படி, இரு மாநில தலைமைச் செயலர்களும் நேற்று விசாரணையின்போது ஆஜராயினர். விசாரணையின்போது, இரு மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும், குறிப்பாக, பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாகவும், அபராதம் விதிப்பதில் ஒருதலைபட்சமாகவும், மெத்தனமாகவும் செயல்படுவதாகவும் அமர்வு கடுமையுடன் குறிப்பிட்டது.விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. பஞ்சாப், ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதே டில்லி காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு காரணம். ஆனால், இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின், 15வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டது. முன்பு தண்டனை விதிக்கப்பட்ட பிரிவுகள் மாற்றப்பட்டு, வெறும் அபராதம் மட்டும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக இந்தச் சட்டப் பிரிவின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு

இதைத் தவிர, மிகவும் குறைந்த அளவுக்கே அபராதம் விதிக்கப்படுகிறது. பயிர்க்கழிவு எரிப்பில் ஈடுபட்டால், 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக விவசாயிகள் முறையிட்டால், அந்த அபராதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது; நீங்கள் பயிர்க்கழிவுகளை எரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு சலுகை அளிப்பதாகவே சட்டத் திருத்தம் உள்ளது.இதைத் தவிர, இந்த அபராதம் விதிப்பதும், பயிர்க் கழிவு எரிப்பதை கண்காணிக்கவும் உரிய அமைப்புகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், போலீஸ் மற்றும் அரசு அமைப்புகள் உள்ளன.அதிலும், ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கின்றனர். மற்றவர்கள் தப்பிக்க விடப்படுகின்றனர். போலீசில் மிகவும் குறைந்த அளவுக்கே வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பயிர்க்கழிவு எரிக்கும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக, மாநில அரசுகள் கூறியுள்ளன. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அதுவாக எப்படி குறையும்? அரசுகளின் இந்த நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே உள்ளன. இந்த விஷயத்தில் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

சும்மா விடமாட்டோம்

அரசியல் காரணங்களுக்காக, விவசாயிகளுக்கு பெரிய அளவில் சலுகைகளை அளிக்கிறீர்கள். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றி உங்களுக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை.அடுத்த, 10 நாட்களுக்குள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை இறுதி செய்வதாகவும், அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், மத்திய அரசை நாங்கள் சும்மா விடமாட்டோம். சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தவும், அதை செயல்படுத்த உரிய அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து வழக்கின் விசாரணை, நவ., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
அக் 24, 2024 15:49

மத்திய பாஜக அரசுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எல்லாம் சிந்திக்க நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை! எவன் குடியைக் கெடுக்கலாம் ,எந்த எதிர்க்கட்சி மாநில அரசை எப்படி கவிழ்க்கலாம் என்று சிந்திக்கவே நேரம் போதவில்லை!


ஆரூர் ரங்
அக் 24, 2024 17:10

அப்போ அதிக புகைக்கு காரணமான பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு?


ஆரூர் ரங்
அக் 24, 2024 12:45

முன்பெல்லாம் எல்லா நடுத்தர பெரிய விவசாயிகளின் பண்ணைகளிலும் மாட்டுக் கொட்டகைகளிலும் வைக்கோலை சேமிக்குமிடமிருக்கும். இப்போது விளைபொருட்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அவற்றை அகற்றி எல்லவற்றிலும் பயிரிடத் துவங்கி விட்டார்கள். இடைவிடாமல் மூன்று போக சாகுபடி செய்ய ஆசை. மாடுகளுக்கும் மானிய விலையில் தீவனம் கிடைப்பதால் வைக்கோலை எரித்து அகற்றுவது அடுத்த சாகுபடிக்கு தயாராகும் நேரத்தை சேமிக்கிறது. எரிப்பதைத் தடுக்க முயன்றால் இன்னொரு விவசாயப் போராட்டம் மூலம் அரசையே கவிழ்த்து விடுவர். ஆளும் கட்சியே அஸ்தமனமாகிவிடும். ஆக அளவுக்கு மீறிய ஜனநாயகம் நாட்டைக் கெடுக்கிறது. நீதிமன்றமே செயற்கைக்கோள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பது மட்டுமே சாத்தியம். ஆனால் நடைபயிற்சி செய்யும் ஆசையை விட வேண்டியிருக்கும்.


Dharmavaan
அக் 24, 2024 09:02

விவசாயிகள் பெரிய போராட்டம் அரசியலுக்கு பிரச்சனை.எனவே கோர்ட் தண்டனையை ஏன் அறிவிக்கவில்லை அதுவும் கண்துடைப்பு


பாமரன்
அக் 24, 2024 08:00

விவசாய கழிவு எரிப்பதை தடுக்கனும்னு சொல்வது என்பது வருடாவருடம் சொதந்திர தின உரையில் பிரதமர் குறிப்பிடும் இந்தியா வல்லரசாகும் ஸ்டேட்மெண்ட் மாதிரி ஆகிடுச்சு... பஞ்சாப் ஹரியானா உபி போன்ற மாநிலங்களில் இது மிகவும் முக்கிய அறுவடை மற்றும் அடுத்த போக தயாரிப்பு காலம்... முன்பெல்லாம் இந்த வைக்கோலில் பெரும் பகுதி கால்நடை தீவனமாகவும் வீட்டு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். இப்போ மாடுகளும் மாடர்ன் சாப்பாட்டுக்கு... அதிக பால் வேணும்னு மனுஷன் செஞ்சதால... மாறிடிச்சு... வீடுகளும் நிறைய திட்டங்களை கொண்டு நிலையான கட்டுமானத்துக்கு சென்றுவிட்டன. இடையே விவசாயமும் பெருத்து விட்டது... கழிவுகளை வச்சிக்கிட்டு விவசாயி என்ன செய்வார்கள்... என்னை விட்டு போனா போதும்னு எரிக்கிறார்கன்.... ஒரு பொருப்பான அரசு நிர்வாகம் அவர்களை சட்டம் போட்டு அடக்காமல் ஆல்டர்னேட் ஏற்பாடுகள் செய்யனும்... இது மத்திய மாநில அரசுகளின் தோல்வி... இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வாழத்தகுதி அற்றதாகிவிடும்... ஏற்கனவே எல்லா கேப்மாரி அரசியல்வியாதிகளின் ஹெட்க்வார்டர்ஸ் வேற... தேவுடா...


Dharmavaan
அக் 24, 2024 09:03

அல்டெர்நெட் எது என்று சொல்


பாமரன்
அக் 24, 2024 10:34

நல்ல கேள்வி...உன் கும்பலை சேர்ந்த ரங்கிடுக்கு பதில் தெரியும்... ஆனால் வாயை இருக்கமா மூடிக்கொண்டு இருப்பாப்ல... சரி நானே சொல்றேன்... எல்லா கழிவுகளை கலெக்சன் செஞ்சி முறைப்படி உபயோகித்தால் காகித கூழ் செய்யலாம்... அதற்காக அதிக தண்ணீர் தேவைப்படும். அதற்கும் அங்கே பஞ்சமில்லை.. அல்லது முறைப்படி இன்சினிரேட் செய்து அதில் வரும் வெப்பத்தை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம்... ஒரேயொரு பிரச்சினை என்னன்னா... இது வருடம் பூராவும் கிடைக்கும் பொருள் அல்ல... ஆனால் முறையாக சேகரித்தால் வருடம் பூராவும் உபயோகப்படுத்தலாம்... இது போன்ற வேலைகளை லாபம் பார்க்காமல் செய்ய அரசால் மட்டுமே முடியும்... ஆனால் நம்ம கம்பெனி பாலிசி க்ளியர்... எதிலும் வசூல் பண்ணனும்... பிறகு அதை தனியார்க்கு... வேற யார்...நம்ம ஸ்பான்ஸர்ட்ட குடுத்திடனும்... எப்படி விளங்கும்... உனக்கு விளங்குச்சா சொல்லு...


முக்கிய வீடியோ