கதக்: தன் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மூன்று ரசிகர்களின் குடும்பத்தினருக்கு, நடிகர் யஷ் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.கதக், லட்சுமேஷ்வராவின், சூரணகி கிராமத்தில் ஜனவரி 8ல், நடிகர் யஷ் பிறந்த நாளை கொண்டாட, கட்-அவுட் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இரும்புக் கம்பி, மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஹனுமந்த் ஹரிஜனா, 21, முரளி நடுவினமனே, 20, நவீன், 19, ஆகிய மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர்.தீபக், பிரகாஷ், மஞ்சுநாத் ஆகிய மூவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு தலா 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது.சம்பவம் நடந்த நாளன்று மாலை, நடிகர் யஷ் சூரணகி கிராமத்துக்கு வந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் ரசிகர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் காசோலையை, நடிகர் யஷ் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக, நேற்று அனுப்பி வைத்துள்ளார்.