உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரதன் போல் காத்திருக்க போவதாக...ஆதிஷி அறிவிப்பு!

பரதன் போல் காத்திருக்க போவதாக...ஆதிஷி அறிவிப்பு!

புதுடில்லி, டில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி நேற்று பொறுப்பேற்றார். ஆனால், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியில் அமர மறுத்து அதை காலியாக வைத்து, அதற்கு அருகில் மற்றொரு நாற்காலியில் அமர்ந்து, தன் பொறுப்புகளை அவர் ஏற்றார். ராமாயண பரதன் போல் பதவியில் இருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.டில்லி மதுபான கொள்கை மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.ஆனால், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார். அமைச்சராக இருந்த ஆதிஷி முதல்வராக பதவியேற்றார். நேற்று அவர் தன் பொறுப்புகளை ஏற்றார். டில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில், கெஜ்ரிவால் ஏற்கனவே அமர்ந்து பணியாற்றிய நாற்காலி போடப்பட்டிருந்தது. அதற்கு அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்து, தன் பொறுப்புகளை ஆதிஷி ஏற்றார்.அப்போது அவர் கூறியதாவது:அரசியலின் புனிதத்தை காக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதை மதிக்கும் வகையில், அவருடைய நாற்காலியில் அமரமாட்டேன். அடுத்த சில மாதங்களுக்கு, அவருக்குப் பதிலாக நான் முதல்வர் பணிகளை கவனிப்பேன். அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் தேர்தலில், அவர் மீண்டும் முதல்வராகி இந்த நாற்காலியில் அமருவார்.ராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றதால், ஆட்சிப் பொறுப்பு அவருடைய சகோதரர் பரதனிடம் வழங்கப்பட்டது. ராமரின் பாதுகையை மன்னருக்கான சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆட்சி புரிந்தார். அது போலவே, கெஜ்ரிவாலின் பரதனாக நான் இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, அவருக்கு சட்ட ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டதால், தன் முதல்வர் பதவியை, அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார். ஆனால் அவர், முதல்வர் அறைக்கு செல்லாமல், தன் அமைச்சக அறையிலேயே முதல்வர் பணிகளை கவனித்து வந்தார். சட்டசபையிலும் முதல்வர் இருக்கையில் அமர்வதை தவிர்த்தார். சட்டப் பிரச்னைகளில் இருந்து ஜெயலலிதா மீண்டு வந்ததும், அவரிடம் மீண்டும் பதவியை ஒப்படைத்தார், பன்னீர்செல்வம். இதையடுத்து, அவரை பரதன் என குறிப்பிட்டு ஜெயலலிதா பாராட்டினார்.

'மிகச்சிறந்த நாடகம்'

டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளதாவது:ஆதிஷி செய்துள்ளது முறையானதல்ல. தன் நடவடிக்கை வாயிலாக அவர் முதல்வர் பதவியை மட்டும் அவமதிக்கவில்லை; டில்லி மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளார். ஆதிஷியின் நடவடிக்கை மிகச்சிறந்த நாடகம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறியுள்ளதாவது:ஆதிஷி, தான் ஒரு டம்மி முதல்வர் என்பதை இதன் வாயிலாக ஒப்புக் கொண்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவரை ராமருடன் ஒப்பிட்டுள்ளது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
செப் 24, 2024 19:28

ராமர் ஊழல் செய்ததாலா காட்டுக்கு அனுப்பப்பட்டார் ????


Sudarsan Ragavendran
செப் 24, 2024 06:21

இந்த பெண்மணி பரதன் அல்ல அந்த மனிதர் ராமனும் அல்ல. ராமரை இதை விட கேவலப்படுத்த முடியாது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 24, 2024 06:15

என்னமா ஏமாற்றுகிறார்கள். இடிப்பது ராமன் கோவில் படிப்பது ராமாயணம், இவளது குடும்பம் அப்சல் குருவிற்காக வாதாடிய குடும்பம். டெல்லியில் வோட் வங்கிக்காக ரோஹிங்கிய முஸ்லிம்களை குடியேற்றியவர்கள். இப்போது ஏமாற்ற ராமாயணத்தை இழுக்கிறார்கள். கேடுகெட்ட ஊழல் செய்த தறுதலை குஜிலிவால். மக்கள் வரும் தேர்தலில் சரியான படம் புகட்டுவார்கள்.


Rajan
செப் 24, 2024 05:48

கேசரிவாலு ராமரா? பதவி கொடுத்ததற்காக ராமரை இழிவு படுத்துவது அநியாயம். ஹும், அண்ணா ஹஸாரேவையே ஏமாற்றிவர்கள்தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை