உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு; டில்லியில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு

 ஏர் இந்தியா விமானத்தில் இன்ஜின் கோளாறு; டில்லியில் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு

புதுடில்லி: டில்லியில் இருந்து, 335 பயணியருடன் மும்பைக்கு நேற்று சென்ற, 'ஏர் இந்தியா' விமானத்தில், திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறால் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக மீண்டும் டில்லியில் தரையிறக்கப்பட்டது.கடந்த ஜூன் 12ம் தேதி, குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலை நகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் 'ஏஐ 171' விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.

விசாரணை

இதில், 260 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பின், அனைத்து விமானங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், பயணியர் விமானங்களில் அவ்வப்போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டில்லியில் இருந்து மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு, ஏர் இந்தியாவின் 'போயிங் 777' ரக 'ஏஐ - 887' விமானம், 335 பயணியருடன் நேற்று அதிகாலை 3:20 மணிக்கு புறப்பட்டது.சில நிமிடங்களில் விமானத்தின் வலதுப்புற இன்ஜினில் எண்ணெய் அழுத்தம் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு திடீரென சரிந்தது. இதையடுத்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, மீண்டும் டில்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணியர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஏஐ - 887 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்த உடன், டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தோம். இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் மீண்டும் தரையிறங்குவதற்கான தேவையான உதவிகளை விமான நிலைய அதிகாரிகள் வழங்கினர்.தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் முழுஆய்வுக்கு உட்படுத்தியபின், உரிய அனுமதிக்கு பின்பே மீண்டும் பயணியர் சேவைக்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாற்று விமானம் மூலம் நேற்று காலை 10:10 மணிக்கு பயணியர் அனைவரும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில் டி.ஜி.சி.ஏ., எனப்படும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இந்த விவகாரம் தொடர்பாக விமான பாதுகாப்பு இயக்குநர் மேற்பார்வையின் கீழ் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. இது தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

தீவிர பிரச்னையா?

விமானப் போக்குவரத்துத் துறையில், இன்ஜின் ஆயில் அழுத்தம் பூஜ்ஜியமாக குறைவது ஒரு தீவிரமான பாதுகாப்புப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இன்ஜின் பாகங்கள் குளிர்ச்சியாகவும், சீராகச் செயல்படவும் எண்ணெய் அவசியம். போதுமான எண்ணெய் அழுத்தம் இல்லாதது விரைவான அதிக வெப்பமடைதலுக்கு வழிவகுக்கும். இப்பிரச்னை தீவிரமடைந்தால், இன்ஜின் செயலிழப்பு அல்லது விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்த கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !