காற்று மாசு: டில்லிக்குள் நுழையும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
புதுடில்லி: தலைநகர் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக, 'பாரத் ஸ்டேஜ் -3' மற்றும் அதற்கும் குறைவான உமிழ்வுத் தர நிலை கொண்ட டில்லியில் பதிவு செய்யப்படாத கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீபாவளியைத் தொடர்ந்து உச்சத்துக்கு சென்ற காற்று மாசு நேற்று முன் தினம் சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் அதிகரிக்கும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது. நுழைய தடை இந்நிலையில், டில்லி அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, டில்லியில் பதிவு செய்யப்படாத 'பாரத் ஸ்டேஜ்-3' மற்றும் அதற்கும் குறைவான உமிழ்வு தர நிலை கொண்ட கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல் டில்லி எல்லைகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் டில்லி போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக, 23 குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன . அண்டை மாநிலங்களில் இருந்து டில்லிக்குள் நுழையும் எல்லைகளான குண்ட்லி, ராஜோக்ரி, திக்ரி, அய நகர், காலிந்தி கஞ்ச், அவுச்சண்டி, மண்டோலி, கபஷேரா, பஜ்கேரா சுங்கச்சாவடி, துவாரகா விரைவுச்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் 50,000 முதல் 70,000 வரை 'பாரத் ஸ்டேஜ் - 4' தர நிலைக்கும் கீழ் உள்ள கனரக வாகனங்கள் இயங்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. டில்லியில் பதிவுசெய்யப்பட்ட சரக்கு வாகனங்கள், பாரத் ஸ்டேஜ் - 4, காஸ் மற்றும் மின்சார கனரக வாகனங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. மீண்டும் அதிகரிப்பு தலைநகர் டில்லியில் நேற்று மீண்டும் மோசம் அடைந்தது. காற்றின் தரக் குறியீடு நேற்று முன் தினம் 218ஆக சரிந்த நிலையில், நேற்று 303ஆக அதிகரித்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வஜிர்பூர் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 383ஆக பதிவாகி இருந்தது. டில்லியில் உள்ள 38 காற்று தர கண்காணிப்பு நிலையங்களில், 26 நிலையங்களில் மிகவும் மோசமான நிலையான 300க்கு மேல் பதிவாகி இருந்தன.