லோக்சபா தேர்தலில் மட்டுமே கூட்டணி: முதல்வர் கெஜ்ரிவால்
சண்டிகர்: ''ஹரியானா சட்டசபை தேர்தலில், ஆத் ஆத்மி தனித்து போட்டியிடும். அதே சமயம், லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி சார்பில் தேர்தலை சந்திக்கும்,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.வரும் ஏப்., - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில், காங்., - தி.மு.க., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணியில், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இடம் பெற்றுள்ளது. எனினும், லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதேபோல, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியும் அறிவித்துள்ளதால், 'இண்டியா' கூட்டணி திகைத்துப் போயுள்ளது.இந்நிலையில், சண்டிகரில் நேற்று, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:ஹரியானா மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். புதுடில்லி மற்றும் பஞ்சாபை போல், ஹரியானாவிலும் ஆம் ஆத்மி அரசு அமையும். இதற்கு முன் ஆட்சி செய்த கட்சிகள், தங்களது கஜானாவை மட்டுமே நிரப்புவதில் கவனம் செலுத்தின. இதனால், அக்கட்சிகள் மீது ஹரியானா மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த முறை எங்களுக்கு ஓட்டளிக்க அவர்கள் தயாராகி விட்டனர். புதுடில்லி மற்றும் பஞ்சாபில், 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படுவது போல், ஹரியானாவிலும் வழங்கப்படும். லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கவுள்ள ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதே சமயம், லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணியின் ஓர் அங்கமாக களமிறங்கும். மத்திய அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி, என்னை கைது செய்ய முயற்சித்து வருகிறது. நான் ஹரியானாவைச் சேர்ந்தவன்; எதற்கும் பயப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.