உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவனை கொல்ல இன்ஸ்டாகிராமில் காதலனுடன் அடித்த அரட்டை அம்பலம்

கணவனை கொல்ல இன்ஸ்டாகிராமில் காதலனுடன் அடித்த அரட்டை அம்பலம்

புதுடில்லி:கணவனைக் கொல்ல கள்ளக் காதலனுடன், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள அரட்டையில் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.புதுடில்லி துவாரகா உத்தம் நகரைச் சேர்ந்தவர் கரண் தேவ்,36. இவரது மனைவி சுஷ்மிதா. உறவினர் ராகுல் அடிக்கடி கரண் வீட்டுக்கு வருவார். அப்போது, சுஷ்மிதாவுக்கு ராகுலுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. கரண் அலுவலகம் சென்ற பின், ராகுல் வந்து சுஷ்மிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மிகவும் நெருங்கிப் பழகிய இருவரும், இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் அரட்டை அடித்து காதலை வளர்த்து வந்தனர்.

அடிக்கடி தகராறு

ஒரு கட்டத்தில் கரணுக்கு இந்தக் காதல் விவகாரம் தெரிய வந்தது. இந்தப் பழக்கத்தை கைவிடுமாறு சுஷ்மிதாவை வலியுறுத்தினார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனைக் கொல்ல, காதலன் ராகுலுடன் சேர்ந்து திட்டமிட்டார்.கரணைக் கொல்ல இருவரும் சேர்ந்து பல்வேறு திட்டங்களை, இன்ஸ்டாகிராம் அரட்டை வாயிலாக திட்டமிட்டனர். ராகுல் கொடுத்த ஆலோசனைப்படி கடந்த, 12ம் தேதி கரணுக்கு கொடுத்த உணவில், 15 துாக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.சாப்பிட்டு முடித்த பின், கரண் தேவ் மயங்கிய தகவல் அறிந்து, ராகுல் வந்தார். கரண் இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்து, இருவரும் சேர்ந்து கரண் உடலில் மின்சாரத்தை பாய்ச்சினர். துடிதுடித்து கரண் இறந்தார்.இதையடுத்து, சுஷ்மிதா தன் மாமியாருக்கு போன் செய்து கரண் மயங்கிக் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். கரண் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அருகில் உள்ள மாதா ரூப்ரானி மாகோ மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

சகோதரருக்கு சந்தேகம்

பரிசோதனை செய்த டாக்டர்கள், கரண் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். மின்சாரம் பாய்ந்து கணவன் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு சுஷ்மிதா தகவல் தெரிவித்தார்.கரண் தேவ் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில், கரண் தேவ் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தார். ராகுலுடன் தினமும் சுஷ்மிதா நீண்ட நேரம் அரட்டை அடித்ததைக் கண்டுபிடித்தார்.இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் சுஷ்மிதா மற்றும் ராகுல் சேர்ந்து கரணை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.அவற்றை ஆய்வு செய்ததில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இரண்டு ஆண்டுகளாக இருவரும் அடித்த அரட்டைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சமீபத்தில், 90க்கும் மேற்பட்ட அரட்டையில் கரண் தேவை கொலை செய்ய திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளாக ராகுலுடன் இன்ஸ்டாகிராமில் அடித்த அரட்டையை குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க உடனுக்குடன் அவற்றை அழித்து இருந்தார். ஆனால், சைபர் கிரைம் போலீசார் அவற்றை மீட்டனர்.கைது செய்யப்பட்டுள்ள சுஷ்மிதா மற்றும் ராகுலிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை