உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதங்களை கீழே போடுங்கள் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

ஆயுதங்களை கீழே போடுங்கள் நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தண்டேவாடா: “ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சி பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக செயல்படுங்கள்,” என, நக்சல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துஉள்ளார்.நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கடந்த சில நாட்களாக திருவிழா நடந்தது.

முழு பாதுகாப்பு

இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களின் அச்சுறுத்தல்களை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. சத்தீஸ்கரின் பஸ்தாரில் குண்டுகள் வெடித்த நாட்கள் முடிவுக்கு வந்து விட்டன. நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். நீங்கள் எங்களுடையவர்கள்; எனவே, எந்த ஒரு நக்சலைட் கொல்லப்படும்போதும் யாரும் மகிழ்ச்சியாக உணர மாட்டார்கள்.ஆயுதம் ஏந்துவதால் பழங்குடியின சகோதர - சகோதரிகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது.ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த நக்சல்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து முழு பாதுகாப்பு கிடைக்கும். கடந்த 50 ஆண்டுளாக வளர்ச்சி அடையாத பஸ்தாருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளையும், கிராமங்களையும் நக்சல்கள் இல்லாததாக மாற்ற முடிவு செய்தால் மட்டுமே, இங்கு வளர்ச்சி ஏற்படும்.

கட்டுமானப் பணி

நக்சல்கள் இல்லாத கிராமங்களில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் செய்து தர மாநில அரசு உறுதியளித்துள்ளது. இதை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்தாண்டு, இங்கு 881 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். இந்தாண்டு, இதுவரை 531 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து உள்ளனர். மாநில வளர்ச்சிக்கு ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ தேவையில்லை, பேனா மற்றும் கணினிகளே போதும் என நினைப்பவர்களே தற்போது சரணடைந்துஉள்ளனர். எனவே, நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, நாட்டின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ