கோழிக்கோட்டில் பரவுது அமீபிக் மூளைக்காய்ச்சல்
திருவனந்தபுரம்; கோழிக்கோட்டில் 'அமீபிக்' மூளைக்காய்ச்சல் மீண்டும் பரவ துவங்கியுள்ளது. மூன்று மாத குழந்தை, இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரசேரியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன் இறந்தார். ஓமசேரியை சேர்ந்த மூன்று மாத குழந்தை மற்றும் அன்னசேரியை சேர்ந்த இளைஞர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இருவரின் வீடு உள்ள பகுதியில், கிணற்று நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து, அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.