சபரிமலையில் கூடுதலாக 5,000 பேருக்கு அனுமதி
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதலாக 5,000 பேருக்கு அனுமதி வழங்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, இந்தாண்டுக்கான மண்டல பூஜை, கடந்த 17ல் தொடங்கியது. தமிழகம், ஆந்திரா, கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி அணிந்து கோவிலுக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், ஆன்லைன் வாயிலான தரிசனத்துக்கு நாள்தோறும் கூடுதலாக 5,000 இடங்களை ஒதுக்க கோவிலை நிர்வகிக்கும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் 30ம் தேதி வரை மேலும் 5,000 பேர் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து அய்யப்பனை தரிசிக்கலாம். அதேபோல், முன்பதிவு இல்லாமல் நேரடியாக வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில், இன்றும், நாளையும் ‘ஸ்பாட் புக்கிங்’ முறையை தேவஸ்வம் போர்டு அதிகரித்துள்ளது. தரிசனத்துக்கு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்த பக்தர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு சரியாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.