உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறந்த வெளியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்

திறந்த வெளியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்

பொதுவாக ஆஞ்நேயரை பக்தியுடன் வணங்கினால், மன தைரியம் அதிகரிக்கும். பயம் தோன்றாது. வாழ்வில் வளம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்நாடகாவின் ஒவ்வொரு இடத்திலும், ஆஞ்சநேயர் கோவிலை காணலாம். இவற்றில் சுரபுராவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும்.

தியா னம்

யாத்கிர், சுரபுரா நகரின் காந்தி சதுக்கத்தில் இருந்து, போலீஸ் நிலையம் வழியாக சிறிது துாரம் சென்றால், அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள அழகான ஆஞ்சநேயர் கோவில், பக்தர்களை கை நீட்டி அழைக்கிறது. இக்கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு 3 அடி உயரமான அழகான ஆஞ்சநேயர் விக்ரகம் உள்ளது.விசாலமான உள் வளாகம், அதன் அருகில் அரசமரம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறிது மரத்தடியில் அமர்ந்து இறைவனை தியானித்து விட்டு செல்கின்றனர். ஆஸ்திகர் மட்டுமின்றி, நாஸ்திகரையும் சுண்டி இழுக்கும் கோவிலாகும்.விஜயநகர சமஸ்தானத்தின் ராஜகுருவாக இருந்த வியாச தீர்த்தர், தீவிர ஆஞ்சநேய பக்தர். ஹம்பி உட்பட பல இடங்களில் 750க்கும் மேற்பட்ட கோவில்களை கட்டினார்.ராமாயண காலத்தில் எங்கெங்கு ராமன், லட்சுமண், சீதை, ஆஞ்சநேயர் நடமாடினரோ, அங்கெல்லாம் கோவில்கள் கட்டினார். ஆனால் பல இடங்களில் கோவில் கட்டும், அவரது கனவு நினைவேறவில்லை. இந்த பொறுப்பை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

தலைநகரம்

வியாச தீர்த்தரின் சீடர்களில் ஒருவரான ரத்னாகர் தீர்த்தர், யாத்கிர் சுரபுராவில் திறந்த வெளியில் ஆஞ்சநேயர் கோவிலை கட்டினார். அங்கு ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார். வியாச தீர்த்தர் விரும்பியபடியே விக்ரகம் அமைக்கப்பட்டது.சுரபுராவின் கோசல மன்னர்களின் முதல் தலைநகரம் வாகனகேரி. ஒருமுறை அரசர், சுரபுரா மலைக்கு வேட்டையாட வருகிறார். அப்போது முயல் ஒன்று, நாயை விரட்டி வருவதை பார்க்கிறார். இந்த இடத்தில் இயற்கை வளங்கள் நிறைந்திருந்ததால், சுரபுராவை தன் தலைநகராக்கினார்.திறந்த வெளியில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசிக்கிறார். திறந்த வெளியில் இருந்த கடவுளுக்காக கோவில் கட்ட விரும்புகிறார். ஆனால், அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'எனக்கு கோவில் வேண்டாம்; திறந்த வெளியில் இருப்பேன்' என கூறுகிறார். எனவே, கோவில் கட்டும் எண்ணத்தை அரசர் கைவிட்டார். அன்று முதல் இக்கோவில், 'பயலு ஆஞ்சநேயர் கோவில்' என்றே அழைக்கப்படுகிறது. திறந்த வெளியில் குடிகொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித்தருகிறார்.புராதனமிக்க பயலு ஆஞ்சநேயர் கோவிலை, பக்தர்கள் ஒன்று சேர்ந்து புதுப்பித்துள்ளனர். வரும் 13ம் தேதி கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. அன்று காலை சுப்ரபாதம், கொடியேற்றம், அபிஷேகம், ஹோமங்கள், அன்னதானம் நடக்கவுள்ளது.அன்று மாலை சத்ய நாராயண பூஜை, உற்சவம், பஜனை நடக்கவுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி