உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்து செய்ய ஒப்புதல்!: அசாம் அமைச்சரவை அதிரடி முடிவு

 முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்து செய்ய ஒப்புதல்!: அசாம் அமைச்சரவை அதிரடி முடிவு

குவஹாத்தி:தற்போதைய காலகட்டத்துக்கு பொருந்தாத மற்றும் குழந்தை திருமணத்தை ஊக்குவிப்பதாக உள்ளதால், பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்ய அசாம் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள து. பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான அரசு, குழந்தை திருமண முறையை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ஏழை, எளிய மக்களை மிரட்டி, சிறுமியரை பலர் திருமணம் செய்வதாக புகார்கள் எழுந்தன.குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், இரண்டு கட்டங்களாக சிறப்பு இயக்கம் நடத்தப்பட்டது. கடந்தாண்டு பிப்ரவரியில் 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,483 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது சிவில் சட்டம்

இதைத் தொடர்ந்து அக்டோபரில் நடந்த இரண்டாம் கட்ட இயக்கத்தின்போது, 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 915 பேர் கைது செய்யப்பட்டனர்.முஸ்லிம்களில் உள்ள பல திருமண முறையைத் தடை செய்யப் போவதாக, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்ததுபோல், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுஉள்ளது.முஸ்லிம்களில் உள்ள பல திருமண முறையை தடை செய்வது தொடர்பாக நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன.இந்நிலையில், குழந்தை திருமண முறையை ஒழிக்கும் வகையில், 1935ல் அறிமுகமான முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்ய, அசாம் அரசு முடிவு செய்துள்ளது.முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இது குறித்து, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா கூறியுள்ளதாவது:முஸ்லிம்கள் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், 1935ல் பிரிட்டிஷ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

நிவாரணம்

இந்த சட்டத்தின்படி, திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வது கட்டாயமல்ல. சுய விருப்பத்தில் பதிவு செய்யலாம். இதற்காக மாநிலம் முழுதும், 94 முஸ்லிம்கள் பதிவாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு அனுமதி அளிக்கிறது.ஆனால், இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமான வயதை எட்டாத மைனர்களுக்கும் திருமணம் செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லாததாலும், குழந்தை திருமணத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.மாநிலத்தில் ஏற்கனவே சிறப்பு திருமண சட்டம் உள்ளது. முஸ்லிம்கள் அதன்படி பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டம் ரத்து செய்யப்படுவதால், வருமானமில்லாமல் பாதிக்கப்படும் 94 பேருக்கு, ஒருமுறை நிவாரணமாக தலா, 2 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முஸ்லிம் சட்டத்தின் கீழான பதிவுகளின் ஆவணங்கள் அனைத்தும், மாநிலத்தில் உள்ள பதிவாளர்கள் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'தேர்தல் ஆதாயம் தேட முயற்சி!'

அசாம் அமைச்சரவை முடிவு குறித்து, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்துல் ரஷீத் மண்டல் கூறியதாவது:லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, அதில் ஆதாயம் தேடுவதற்காக பா.ஜ., அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பிரிவினையை ஏற்படுத்தி, ஓட்டு ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இது, முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டும் விஷயமே தவிர, வேறு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை