உத்தராகண்டில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த பெய்லி பாலம் அமைத்தது ராணுவம்
உத்தரகாசி : உத் தராகண்டில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தாராலி கிராமத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த, 'பெய்லி பாலம்' எனப்படும் தற்காலிக பாலத்தை ராணுவம் அமைத்துள்ளது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி என்ற கிராமத்தில், கடந்த 5ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அதிதீவிர மழை பெய்தது. கீர் கங்கா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், மலை உச்சியில் இருந்து சகதியுடன் பெரு வெள்ளம் பெருக்கெடுத்ததால், மலைப் ப குதியில் இருந்த வீடுகள் , ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பேரிடரில், ஐந்து பேர் பலியாகினர். இதுவரை, 1,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆறாவது நாளாக நேற்றும், தாராலி கிராமத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது மழை பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற் பட்டுள்ளது. தாராலி கிராமத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தவும், மக்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும், கங்கானி - தாராலிக்கு இடையே, 'பெய்லி பாலம்' கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ராணுவத்தினர் கட்டி முடித்து உள்ளனர். பெய்லி பாலம் என்பது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சிறிய இரும்பு பாலம். அவசர காலங் களில் பாதிக்கப்பட்ட பகுதி களில் இணைப்பை ஏற் படுத் த இது உதவுகிறது.
நிவாரணம் கேட்டு போராட்டம்
தாராலி கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், தாராலி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக, 5,000 ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகள் நேற்று வழங்கினர். இதை ஏற்க மறுத்த மக்கள், '5 லட்சம் ரூபாய் என அறிவித்து விட்டு, 5,000 ரூபாய் தருவதா?' என கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 'இது முதற்கட்ட உடனடி நிவாரணம். வெள்ளப் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்த பின், இழப்பீடு வழங்கப்படும்' என அதிகாரிகள் கூறினர். எனினும், இதை ஏற்காமல் மக்கள் போராடியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.