இடுக்கியில் பருவ மழை குறைந்தும் அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு
மூணாறு,:கேரளா இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை 33 சதவீதம் குறைந்த நிலையில், இடுக்கி அணையில் நீர்மட்டம் கடந்தாண்டை விட 23.22 அடி அதிகரித்தது.கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 28ல் துவங்கியது. வழக்கமாக செப்டம்பர் இறுதியுடன் பருவ மழை முடிவுக்கு வரும் என்றபோதும் இந்தாண்டு அக்.15 வரை நீடித்தது. எனினும் பருவ மழை ஜூன் முதல் செப்.30 வரை கணக்கிடப்படுகின்றது.அதன்படி அந்த கால அளவில் மாவட்டத்தில் சராசரியாக 2574.3 மி.மீ., மழை பெய்யும். இந்தாண்டு 1721.1 மி.மீ., மழை பதிவானது. இது 33 சதவீதம் குறைவாகும். மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை மிகவும் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை குறைந்ததால் வட கிழக்கு பருவ மழையை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிகரிப்பு
பருவ மழை குறைந்தபோதும் இடுக்கி அணையில் நீர்மட்டம் அதிகரித்தது. 554 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 371.95 அடியாகவும், இதே கால அளவில் கடந்தாண்டு 348.73 அடியாகவும் இருந்தது. இது கடந்தாண்டை விட 23.22 அடி கூடுதலாகும்.