துமகூரு: கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய சென்ற போது, ஏ.எஸ்.ஐ., - ஏட்டுவை ஆயுதத்தால் தாக்கிய, ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு உள்ளார்.துமகூரு டவுனை சேர்ந்தவர் மனோஜ் என்கிற மண்டேலா, 35. ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு உட்பட பல வழக்குகள், துமகூரு டவுன் போலீஸ் நிலையத்தில், நிலுவையில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மனோஜின் கூட்டாளியான பொல்லார்ட் என்பவரை, எதிர்கோஷ்டியை சேர்ந்த சிவபிரசாத், பந்தே நாகா கொலை செய்தனர்.கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, தனியாக சிக்கிய பந்தே நாகாவை, மனோஜ் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார். படுகாயம் அடைந்த பந்தே நாகா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மனோஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவானது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடினர். இந்நிலையில் துமகூரு ரூரல் சிக்கோடி பகுதியில், மனோஜ் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மனோஜை, போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, ஆயுதங்களை எடுத்து, ஏ.எஸ்.ஐ., மல்லேஷ், ஏட்டு முகமது நயாசை, தாக்கினார். அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் தினேஷ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி, ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.இதனால் அவரை நோக்கி, இன்ஸ்பெக்டர் தினேஷ் துப்பாக்கியால் சுட்டார். வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவரை போலீசார் கைது செய்தனர். மனோஜ், மல்லேஷ், முகமது நயாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்காப்புக்காக மனோஜ் சுட்டு பிடிக்கப்பட்டதாக, துமகூரு எஸ்.பி., அசோக் விளக்கம் அளித்து உள்ளார்.