டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது அடையாளம் தெரியாத நபர், நேற்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியின்போது நடந்த இந்த அசம்பாவிதத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது முதல், பொதுமக்களின் குறைகளை தீர்க்க, 'ஜன் சுன்வாய்' என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார். அதன்படி, டில்லியில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, முதல்வர் ரேகா குப்தாவிடம் மனு கொடுப்பது போல் நெருங்கி வந்த ஒருவர், சற்றும் எதிர்பாராத தருணத்தில் முதல்வரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து விழுந்த முதல்வர் ரேகா குப்தாவின் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொதுமக்கள் குறை தீர்ப்பு நிகழ்வின்போது, முதல்வர் மீதே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதல் சம்பவத்திற்கு டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர், முதல்வரின் கன்னத்தில் அறைந்ததாக வெளியான தகவலை அவர் மறுத்தார். இந்த தாக்குதலுக்கு முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால், வன்முறைக்கு இடமே கிடையாது. டில்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கெஜ்ரிவால் தெரிவித்தார்.
தாக்கியவர் யார்?
முதல்வர் ரேகா குப்தாவை தாக்கியவர் குஜராத்தின் ராஜ்கோட்டை சேர்ந்த, 41 வயது சக்ரியா ராஜேஷ் பாய் கிம்ஜிபாய் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள அவரது தாயாரிடம், குஜராத் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில், ''ராஜேஷ் பாய் ரிக்ஷா ஓட்டி வருகிறார். மூர்க்க குணம் கொண்டவர். ஆத்திரம் வந்தால் எதிரே இருப்பவர் யார் என்று கூட பார்க்க மாட்டார். அடித்து விடுவார். என்னை கூட தாக்கி இருக்கிறார். லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்காக அவர் மருந்துகள் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதலே அமைதி இழந்து காணப்பட்டார்,'' என, கூறினார். அதே சமயம் தாக்குதலுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? அரசியல் பின்னணி கொண்டவரா? என பல்வேறு கோணங்களில் டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டமிட்ட சதி
டில்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல், திட்டமிட்ட சதி என, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சியில், ராஜேஷ் பாய் வேவு பார்த்தது தெளிவாக பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரின் இல்லத்தை வேவு பார்த்து, மொபைல் போனில் வீடியோ எடுத்ததாகவும், அதன் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளை கணித்து தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷ் பாய் இருக்கும் அந்த காட்சிகள் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான தாக்குதல் போல தெரியவில்லை என, டில்லி அமைச்சர் கபில் மிஸ்ராவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறைபாடு?
பொதுமக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியின்போது நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து, டில்லி முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீராய்வு செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது முதல்வர் ரேகா குப்தாவுக்கு டில்லி போலீசாரின் 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து, பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - நமது சிறப்பு நிருபர் -