உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை வடிவில் பாலகிருஷ்ணா கோவில்

குழந்தை வடிவில் பாலகிருஷ்ணா கோவில்

ஹம்பி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் தான். ஆனால் அதே ஹம்பியில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், 1513ம் ஆண்டில் பாலகிருஷ்ணா கோவில் கட்டப்பட்டுள்ளது.

போரில் வெற்றி

உதயகிரியில் நடந்த போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகள், கட்டட வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றது.கிருஷ்ணதேவராயர், கலை மற்றும் கட்டட கலை மீது ஆர்வம் கொண்டவர். அவரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள், கலை வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவை.இக்கோவிலின் முக்கிய சிலையான பாலகிருஷ்ணா சிலை, தற்போது சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் துாண்கள் கொண்ட மண்டபங்கள், பல சிறிய சன்னிதிகளும் உள்ளன.

கிருஷ்ண பஜார்

கோவிலின் கிழக்கு பகுதியில் மண்டபம் உள்ளது. தெற்கு பகுதியில் வாழை தோட்டங்கள் உள்ளன. கோவிலில் உள்ள நீண்ட மண்டபம், விஜயநகர ஆட்சி காலத்தில் கடைகளாக இருந்தன. இதை, 'கிருஷ்ண பஜார்' என்று அழைக்கின்றனர். இரண்டு பக்கமும் அரை கிலோ மீட்டர் துாரம், 49.5 மீட்டர் அகலத்தில் கடைகள் அமைந்திருந்தன.விஜயநகரம் அதன் வர்த்தகத்திற்கு பிரபலமானது. அகழ்வாராய்ச்சியின் போது, கிருஷ்ணர் கோவில் அருகில் சீன பீங்கான் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு திங்கட்கிழமையும் விற்கப்பட்ட பொருட்களுக்கு வரி வசூலிக்கப்பட்டதாகவும் அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.கோவிலின் இடதுபுறம் பாறை நிலப்பரப்பு உள்ளது. இந்த கட்டமைப்பு வழியாக நடந்து சென்றால், கோவில் குளத்துக்கு செல்லலாம். கோவிலின் மேற்கு பகுதியில் சிறிது துாரம் நடந்து சென்றால், முன்னர் தானிய கிடங்காக பயன்படுத்தப்பட்ட செவ்வக வடிவிலான கட்டடத்தை காண முடியும்.கோவிலின் சுவர்களில் கன்னட எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் கோவிலின் கட்டுமான கதையையும் நினைவு கூறுகிறது. மன்னரின் ஆட்சி, அக்கால சமூக வாழ்க்கை பற்றிய விபரங்கள் இதில் அடங்கி உள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை