| ADDED : ஜன 14, 2025 03:23 AM
புதுடில்லி: எல்லை பிரச்னை தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, வங்கதேச துணை துாதர் நுரல் இஸ்லாம் நேற்று நேரில் ஆஜரானார். அண்டை நாடான வங்கதேசத்துடன், நம் நாடு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் இருந்து எல்லை வழியாக நம் நாட்டுக்குள் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க, இந்தியா - வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த வங்கதேச அரசு, இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையின் ஐந்து இடங்களில், இந்தியா வேலி அமைப்பதாக குற்றஞ்சாட்டியது. மேலும் இது குறித்து விளக்கும்படி, வங்கதேசத்துக்கான இந்திய துாதர் பிரணய் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதன்படி, வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தில், சமீபத்தில் அவர் ஆஜரானார். அப்போது, எல்லையில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டதற்கு அவரிடம் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்தது. இந்த சந்திப்புக்குப் பின் பிரணய் வர்மா கூறுகையில், 'எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக, இந்தியா - -வங்கதேசம் இடையே புரிதல் உள்ளது. இது குறித்து, நம் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளும், வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். 'இதில் உடன்பாடு ஏற்பட்டு, எல்லையில் குற்றங்களை தடுக்க கூட்டு அணுகுமுறை சார்ந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும். இது தொடர்பாகவே வங்கதேச வெளியுறவு செயலருடன் ஆலோசனை மேற்கொண்டேன்' என்றார். இந்நிலையில், எல்லை பிரச்னை தொடர்பாக, வங்கதேச துணை துாதர் நுரல் இஸ்லாமுக்கு வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. இதன்படி டில்லியில் உள்ள அமைச்சகத்தில் அவர் நேற்று ஆஜரானார்.