நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் பலி சோகத்தில் முடிந்த பெங்களூரு வெற்றி பேரணி
பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்ற, ஆர்.சி.பி., எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்க, சின்னசாமி மைதானம் முன் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி, ஆறு பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர். ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி, நேற்று முன்தினம் இரவு குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடந்தது. பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொண்டாட்டங்கள்
நேற்று முன்தினம் இரவு முழுதும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொண்டாட்டங்கள் அரங்கேறின; பட்டாசு வெடித்தும், பைக்கில் ஆர்.சி.பி., கொடியுடனும் சென்று வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர்.இந்நிலையில், வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு, சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.முன்னதாக, பெங்களூரில் உள்ள கர்நாடகா தலைமை செயலகத்தில் கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசு ஏற்பாடு செய்திருந்தது.விராத் கோலி, ரஜத் படிதர் உள்ளிட்ட வீரர்களையும், வெற்றிக் கோப்பையையும் பார்க்க, நேற்று மதியம் முதல், நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தலைமை செயலகம் முன் ரசிகர்கள் திரண்டனர். அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது.தலைமை செயலகத்தில் இருந்து சிறிது துாரத்தில் தான், சின்னசாமி கிரிக்கெட் மைதானமும் இருப்பதால், ரசிகர்கள் அங்கும் படையெடுத்து செல்ல துவங்கினர்.பெங்களூரு அணிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க, 'பாஸ்' பெற்றவர்கள் மட்டும் மைதானத்திற்குள் செல்ல முடியும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.ஆனால், பாஸ் வாங்காத ரசிகர்களும் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் 6வது நுழைவாயில் கேட் மீது ஏறி மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். இதுபோல 18வது நுழைவாயில் பகுதியிலும், மைதானத்திற்குள் செல்ல ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையில், 12வது நுழைவாயில் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்ததால், வேறு வழியின்றி நுழைவாயில் கேட்டை, மைதான ஊழியர்கள் திறந்து விட்டனர்.முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது; ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதற்குள் கீழே விழுந்த 50க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்றி, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களில் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யான்ஷி, 13, தியா, 26, ஷ்ரவன், 31, அடையாளம் தெரியாத இரண்டு இளம்பெண்கள், ஒரு வாலிபர் என, ஆறு பேர் உயிரிழந்தனர். ரூ.10 லட்சம்
மணிப்பால் மருத்துவமனையில் சின்மயி, 19, என்பவரும், வைதேகி மருத்துவமனையில் பூமிக், 20, சஹானா, 19, ஒரு வாலிபர், 35 வயது ஆண் என, நான்கு பேரும் இறந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின், சித்தராமையா அளித்த பேட்டி:தலைமை செயலகம் மற்றும் மைதானம் முன் மூன்று லட்சம் பேர் கூடி விட்டனர். இந்த துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால், இதை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது.உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தெளிவான தோல்வி!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள் அசோக், விஜேந்திரா உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:பெங்களூரு அணி ஐ.பி.எல்., பட்டத்தை வென்றதை கொண்டாடிய நேரம், தற்போது துக்க நேரமாக மாறி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம்.அரசு அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் போய் விட்டன. சரியான திட்டமிடல் இல்லாமலும், போலீஸ் துறைக்கு போதிய நேரம் கொடுக்காமலும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்ய நினைத்தது தான் இந்த துயரத்திற்கு காரணம். இது, அரசின் தெளிவான தோல்வி.இவ்வாறு அவர் கூறினார்.