இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.,வுக்கு தலைவலி! 3 சீட்களுக்கு நுாற்றுக்கணக்கானோர் போட்டி
பெங்களூரு : கர்நாடகாவின், மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மூன்று சீட்களுக்கு, நுாற்றுக்கணக்கானோர் முட்டி மோதுவது, தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் பசவராஜ் பொம்மை, ஹாவேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பல்லாரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரான துக்காராம், மாண்டியாவில் ம.ஜ.த., சார்பில் குமாரசாமியும் வெற்றி பெற்றிருந்தனர்.பசவராஜ் பொம்மையால் காலியான ஹாவேரி மாவட்டத்தின் ஷிகாவி, குமாரசாமியால் காலியான ராம்நகரின் சென்னப்பட்டணா, துக்காராமால் காலியான பல்லாரியின் சன்டூர் சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், பா.ஜ., சுறுசுறுப்படைந்து, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஈடுபட்டுள்ளது.ஆயினும், மூன்று தொகுதிகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சீட் கேட்பதால், பா.ஜ., நெருக்கடியில் சிக்கியுள்ளது. சண்டூர் தொகுதியில் கடந்த நான்கு முறையாக, காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அக்கட்சியின் பாதுகாப்பு கோட்டையான சண்டூரை கைப்பற்ற, பா.ஜ., முயற்சிக்கிறது.சட்டவிரோத சுரங்க தொழில் வழக்கில், பல்லாரிக்குள் நுழைய ஜனார்த்தன ரெட்டிக்கு நீதிமன்றம் விதித்திருந்த தடை நீங்கியுள்ளது. அவரும் பல்லாரிக்கு வந்துள்ளார். இது பா.ஜ., தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஜனார்த்தன ரெட்டி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சோமசேகர ரெட்டி சகோதரர்களுக்கு இடையிலான கோபம், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவுக்கு காரணமானது. தற்போது இவர்கள் ஒரே மேடையில் தோன்றி, கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளனர்.சண்டூர் தொகுதி இடைத்தேர்தலில், திவாகர், முன்னாள் எம்.பி., தேவேந்திரப்பா, அவரது மகன் அன்னப்பா, ராம கிருஷ்ணா, பங்காரு ஹனுமந்து என, பலர் சீட் எதிர்பார்க்கின்றனர்.சென்னப்பட்டணா தொகுதிக்கு, வேட்பாளரை தேர்வு செய்வது, பா.ஜ.,வுக்கு சவாலாக உள்ளது. இங்கு போட்டியிட யோகேஸ்வர் ஆர்வமாக காத்திருக்கிறார். இதற்காக பல முறை டில்லிக்கு சென்று, மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து, கூட்டணி வேட்பாளராக தன்னை களமிறக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் தன் மகன் நிகிலை களமிறக்க, குமாரசாமி விரும்புவதாக கூறப்படுகிறது. தொகுதி கைநழுவ கூடாது என்பது, அவரது எண்ணமாகும்.சீட் கிடைக்காவிட்டாலும், சுயேச்சையாக போட்டியிட தயாராக இருப்பதாக, யோகேஸ்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக, சென்னப்பட்டணாவின், கூட்லூரில் பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களுடன், யோகேஸ்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இவரது மனதை கரைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது.ஷிகாவி தொகுதியில், எம்.பி., பசவராஜ் பொம்மையின் மகன் பரத், சீட் எதிர்பார்க்கிறார். ஆனால் ஸ்ரீகாந்த், துன்டி கவுடர், சசிதர், ஷோபா நிஸ்சிமகவுடர் உட்பட பலர் போட்டியிட வாய்ப்பளிக்கும்படி மன்றாடுகின்றனர். சிலர் எங்களுக்கு சீட் இல்லையென்றால், பசவராஜ் பொம்மையின் மகன் பரத்துக்கு சீட் தரும்படி கூறுகின்றனர். மேலும் சிலர், 'குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். பரத்துக்கு பதிலாக வேறு ஒருவரை களமிறக்குங்கள்' என, அறிவுறுத்துகின்றனர்.எனவே, மூன்று தொகுதிகளின் வேட்பாளர் தேர்வு, பா.ஜ.,வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னப்பட்டணாவில், குமாரசாமி, யோகேஸ்வர் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.- யோகேஸ்வர், பா.ஜ.,