அதிகாலை 3 மணிக்கு வந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., கோவில்களை அகற்ற எதிர்ப்பு
மயூர் விஹார்:பட்பர்கஞ்ச் பா.ஜ., - எம்.எல்.ஏ., தலைமையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மயூர் விஹாரில் உள்ள மூன்று கோவில்களை இடிப்பது ஒத்திவைக்கப்பட்டது.கிழக்கு டில்லியின், மயூர் விஹாரில் பசுமைப் பகுதியின் 2ம் கட்டத்தில் காளி கோவில், அமர்நாத் கோவில், பத்ரிநாத் கோவில்கள் இருப்பதாக டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையம் மதிப்பீடு செய்தது.இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த கோவில்களை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களுக்கு டி.டி.ஏ., சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் பொக்லைனுடன் டி.டி.ஏ., குழுவினர் மயூர் விஹாருக்கு விரைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த அப்பகுதி மக்கள், பட்பர்கஞ்ச் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவீந்தர் சிங் நாகி தலைமையில் அதிகாலை 3:00 மணிக்கே அங்கு குவிந்தனர்.மூன்று கோவில்களை இடிக்க டி.டி.ஏ., குழுவினர் வந்ததும், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிகாரிகளுடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., பேச்சு நடத்தினார்.இதையடுத்து கோவில்களை இடிக்கும் பணியை டி.டி.ஏ., ஒத்திவைத்தது.இதுகுறித்து தன் 'எக்ஸ்' பக்கத்தில் படங்களுடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவீந்தர் சிங் நாகி வெளியிட்டுள்ள பதிவு:கோவிலை பாதுகாக்க நாங்கள் அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தோம். கோவிலை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் அனைவரும் மேற்கொண்டோம். முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பிறகு கோவில்களை இடிக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கோவில்கள், எங்கள் உணர்வுடனும் நம்பிக்கையுடனும் கலந்திருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.