உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கவர்னரை எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்ததால் பரபரப்பு

மணிப்பூரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி? கவர்னரை எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்ததால் பரபரப்பு

இம்பால்: ''மணிப்பூரில் புதிய அரசை அமைக்க, பா.ஜ., கூட்டணியின், 44 எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர்,'' என, அம்மாநில பா.ஜ., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023 மே மாதத்தில், மெய்டி - கூகி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6dh05nc7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ராஜினாமா

ஓராண்டுக்கும் மேல் பதற்றம் நிலவியதை அடுத்து, மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பியது. மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக, முதல்வராக இருந்த பா.ஜ., தலைவர் பைரேன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பிப்ரவரியில் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள மணிப்பூர் சட்டசபையில், பா.ஜ., கூட்டணிக்கு, 44 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு வெறும் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். மணிப்பூரில் அரசு பஸ்களில், 'மணிப்பூர்' என்ற வார்த்தை மறைக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் அஜய் குமார் பல்லாவை, பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தலைமையிலான அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சந்தித்தனர்.அரை மணி நேரத்துக்கு மேல் நடந்த சந்திப்பில், மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து, அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

நல்ல முடிவு

கவர்னரை சந்தித்த பின், பா.ஜ., தலைவர் தோக்சோம் ராதேஷ்யாம் சிங் கூறியதாவது: மணிப்பூரில் மக்கள் விருப்பத்தின்படி புதிய அரசை அமைக்க, பா.ஜ., கூட்டணியின், 44 எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருப்பதாக கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் தெரிவித்தோம்.மக்களின் நலன் கருதி, அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என, நம்புகிறோம். மீண்டும் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். புதிய அரசு அமைவதில் யாருக்கும் பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மணிப்பூரில் சட்டசபை தேர்தல் நடக்க, இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் உள்ள நிலையில், தற்போதைய கள நிலவரத்துக்கேற்ப, மீண்டும் ஆட்சி அமைக்க, பா.ஜ.,வுக்கு கவர்னர் அஜய் குமார் பல்லா அழைப்பு விடுப்பார் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் முதல்வர் கடிதம்

கவர்னர் அஜய் குமார் பல்லாவுக்கு, முன்னாள் முதல்வர் பைரேன் சிங் நேற்று எழுதிய கடிதம்:மணிப்பூரில் பா.ஜ., அரசின் அதிரடி நடவடிக்கைகளால், சட்ட விரோதமாக குடியேறிய, 5,457 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்தவர்கள்.இதுபோன்ற நபர்களின் வருகையால், மணிப்பூரின் பழங்குடியின மக்களின் அடையாளம் மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குடியேறும் நபர்கள், வனப்பகுதிகளை ஆக்கிரமித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இவர்களால் தான், மாநிலத்தில் அமைதியின்மை நிலவுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ