கலெக்டர் உத்தரவையும் மீறி பெலகாவியில் கருப்பு தினம்
பெலகாவி; ''கலெக்டர் உத்தரவையும் மீறி, பெலகாவியில் நேற்று எம்.இ.எஸ்., அமைப்பினர் கருப்பு தினம் அனுசரித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார்.கர்நாடகா- - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி உள்ளது. மராத்தி மொழி பேசுவோர் கணிசமாக இருப்பதால் பெலகாவியை, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது; விட்டு கொடுக்க கர்நாடகா மறுக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தின் போது, மஹாராஷ்டிராவின் எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகி கிரண் சமிதி, பெலகாவியில் கருப்பு தினம் அனுசரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு தினம் கொண்டாடிய போது, கன்னடர் - - மராத்தியர் இடையில் பிரச்னை ஏற்பட்டது.இதனால், இந்த ஆண்டு கருப்பு தினம் கொண்டாட அனுமதி இல்லை என்று, பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன் உத்தரவிட்டு இருந்தார்.ஆனாலும் நேற்று பெலகாவியில் எம்.இ.எஸ்., கருப்பு தினம் அனுசரித்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பைக் பேரணி நடத்தினர். ''கலெக்டர் உத்தரவை மீறி செயல்பட்ட எம்.இ.எஸ்., அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறினார்.