தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: பெங்களூரின் பிரபலமான தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.பெங்களூரின் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், விமான நிலையத்துக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.சில நாட்களுக்கு முன், பெங்களூரின் கெம்பேகவுடா விமான நிலையம், பெலகாவி விமான நிலையத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இந்நிலையில் நேற்று தனியார் பள்ளிக்கு மிரட்டல் வந்தது. பெங்களூரின் அசோக் நகரில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி மிகவும் பிரபலமான பள்ளியாகும். நேற்று மதியம் இ - மெயில் மூலமாக, இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன், அங்கு வந்த அசோக்நகர் போலீசார், பள்ளியில் ஒரு இடம் விடாமல் தேடினர். இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது. அதன்பின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.