உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் 70 நாளுக்கு பின் வீடு திரும்பினான்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன் 70 நாளுக்கு பின் வீடு திரும்பினான்

பாட்னா: பீஹாரில், இறந்ததாக அறிவிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன், 70 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. பீஹாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், கடந்த பிப்., 8ல் காணாமல் போனான். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பிப்., 28ல், ரயிலில் அடிபட்ட வேறொரு சிறுவன், மார்ச் 1ல் உயிரிழந்தான். இந்த உடலை அடையாளம் காண வரும்படி, அந்த பெற்றோருக்கு அழைப்பு வந்தது. உடலை பார்த்த பெற்றோர், 'இது தங்களது மகன் இல்லை' என்றனர். ஆனால், 'இது உங்களது மகன்தான். உடலை பெற்றுக் கொள்ளுங்கள்' என, போலீசார் வற்புறுத்தினர். 'மரபணு சோதனை நடத்துங்கள்' என, பெற்றோர் பல முறை வலியுறுத்தியும் கேட்காத போலீசார், அந்த உடலை வலுக்கட்டாயமாக ஒப்படைத்தனர். வேறு வழியின்றி உடலை பெற்ற பெற்றோர், இறுதிச்சடங்கு செய்தனர். இதையடுத்து, இழப்பீடாக சிறுவனின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது.இந்நிலையில், உயிர்இழந்ததாக அறிவிக்கப்பட்ட சிறுவன், 70 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார். தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில், அந்த சிறுவன் நேரில் ஆஜரானான். தன்னை ஒரு கும்பல் கடத்தி நேபாளத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து தப்பி சமீபத்தில் பீஹாருக்கு வந்ததாகவும் சிறுவன் கூறினான். மகன் திரும்பி வந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், இழப்பீடாக அளித்த பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், தகனம் செய்யப்பட்ட சிறுவன் யார் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை