முதல்வர் ரேகா வீட்டு முன் பஸ் மார்ஷல் போராட்டம்
புதுடில்லி:கவர்னரால் பணி நீக்கப்பட்ட, 'பஸ் மார்ஷல்' எனப்படும் சிவில் பாதுகாப்பு தன்னார்வ ஊழியர்கள், மீண்டும் தங்களை பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் ரேகா குப்தா வீட்டு முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், அரசு பஸ்களில் பயணியருக்கு உதவி செய்ய, 2015ம் ஆண்டு பஸ் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இந்த நியமனத்துக்கு, நிதி மற்றும் வருவாய் துறை ஆட்சேபனை தெரிவித்ததால், பஸ் மார்ஷல்களை பணி நீக்கம் செய்து, 2023ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.தங்களை மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரி பஸ் மார்ஷல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், வடமேற்கு டில்லி ஷாலிமர் பாகில், முதல்வர் ரேகா குப்தா வீட்டு முன், பஸ் மர்ஷல்கள் திரண்டனர். தங்களை மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரி, 'ரேகா குப்தா ஹோஷ் மே ஆவ்', 'டில்லி சர்க்கார் ஹோஷ் மே ஆவ்' மற்றும் 'அப்னே வாதே பூரே கரோ' என கோஷமிட்டனர்.ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில ஒருங்கிணைப்பாளர் சவுரவ் பரத்வாஜ், “கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பஸ் மார்ஷல்களை போலீசார் தடுத்து வைத்தனர். தேர்தல் பிரசாரத்தில், அரசு அமைத்தவுடன், 60 நாட்களுக்குள் பஸ் மார்ஷல்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என பா.ஜ., உறுதியளித்தது. ஆனால், தற்காலிகமாக கூட இன்னும் பஸ் மார்ஷல்கள் நியமிக்கப்படவில்லை,”என்றார்.