அய்யப்பன் கோவில் கருவறை தங்க கதவிலும் திருட்டு; தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் மீண்டும் கைது
பத்தனம்திட்டா: சபரிமலை கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு, தொழிலதிபர் விஜய் மல்லையா கிலோ கணக்கில் தங்கம் காணிக்கையாக வழங்கினார். அதை வைத்து கோவிலின் மேற்கூரை, கருவறை கதவுகள், துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கத்தகடுகள் வேயப்பட்டன. தங்க முலாம் கடந்த 2019ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத்தகடுகள் கழற்றப்பட்டன. இதற்கான பராமரிப்பு செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, அதை சென்னைக்கு கொண்டு சென்று தங்க முலாம் பூசினார். பின்னர் மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தபோது, தங்கத்தகடுகளின் எடை, 4 கிலோ அளவுக்கு குறைந்திருந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திருடப்பட்ட தங்கத்தை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, துவாரபாலகர் சிலையில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் முதல் நபராக உன்னிகிருஷ்ணன் போத்தியை கைது செய்தது. மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துவாரபாலகர் சிலைகளின் பீடங்களையும் பறிமுதல் செய்தது. விசாரணை இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவில் கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கிலும், உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நேற்று மீண்டும் கைது செய்தனர். 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ரான்னி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, 2019ம் ஆண்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த வாசுவிடமும், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தங்க முலாம் பூசும் பணி முடிந்ததும் தன்னிடம் மிச்சமான தங்கத்தை ஏழை பெண் திருமணத்திற்கு தானமாக வழங்கலாமா எனக்கேட்டு, அப்போது தேவசம் போர்டு தலைவராக இருந்த வாசுவிடம், உன்னிகிருஷ்ணன் போத்தி கடிதம் அனுப்பி அனுமதி கேட்டிருந்தார். இதனால், வாசுவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.