கர்நாடகாவில் இன்று 3 தொகுதிகளில் இடைத்தேர்தல்; தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஓட்டுப்பதிவு
ராம்நகர் ; கர்நாடகாவில் காலியாக உள்ள, மூன்று சட்ட சபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதி களில் போட்டியிடும் தலைவர்களின் எதிர்காலத்தை வாக்காளர்கள் நிர்ணயிக்கின்றனர்.ராம்நகரின் சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, பல்லாரியின் சண்டூர் - தனித் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம், ஹாவேரி ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய மூன்று பேரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். காலியான மூன்று தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. 'பிங்க்' சாவடிகள்
சென்னப்பட்டணாவில் காங்கிரசில் யோகேஸ்வர், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் நிகில், சண்டூரில் காங்கிரசில் அன்னபூர்ணா, பா.ஜ.,வில் பங்காரு ஹனுமந்த், ஷிகாவியில் பா.ஜ.,வில் பரத் பொம்மை, காங்கிரசில் யாசிர் அகமதுகான் பதான் மற்றும் 39 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.இன்று காலை 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. சென்னப்பட்டணாவில் 208, சண்டூரில் 153, ஷிகாவியில் 196 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னப்பட்டணாவில் 2,32,996; சண்டூரில் 2,36,405; ஷிகாவியில் 2,37,669 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஐந்து பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பெண்கள் மட்டும் ஓட்டுப்போட முடியும். பதற்றமானவை
ஷிகாவியில் 196 ஓட்டுச்சாவடிகளில் 92 பதற்றமானவை என்றும், சண்டூரில் 55; சென்னப்பட்டணாவில் 50 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரிகள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் என 1,060 பேர் பணி செய்ய உள்ளனர்.ஓட்டு போட வருவோர் ஆதார் அட்டை, 100 நாள் வேலை அட்டை, வங்கி, தபால் நிலையங்களால் வினியோகிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், தொழிலாளர் நலத்துறையால் வினியோகிக்கப்பட்ட சுகாதார அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு.பாஸ்போர்ட், மத்திய, மாநில அரசால் வினியோகிக்கப்பட்ட அடையாள அட்டை, எம்.பி., - எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களால் வழங்கப்படும் அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நலத்துறை சார்பில் வினியோகிக்கப்படும் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. யாருடைய கழுத்தில் வெற்றி மாலை விழும் என்பது தெரிந்துவிடும்.ஷிகாவி, சண்டூர் தொகுதியை விட, சென்னப்பட்டணா தொகுதி தலைவர்களின் கவுரவ பிரச்னையாக பார்க்கப்படுகிறது. சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிவகுமார் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெற்றால் நிகிலின் அரசியல் எதிர்காலம் உதயமாகும்.ஷிகாவியில் காங்கிரஸ் வென்றால், சித்தராமையா முதல்வராக தொடர வாய்ப்பு உள்ளது. சண்டூரில் பா.ஜ., வெற்றி பெற்றால், ஜனார்த்தன ரெட்டி மவுசு அதிகரிக்கும். இதனால் இந்த தேர்தல், தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் உள்ளது.
மூன்று தொகுதிகளில் ரூ.33 கோடி மது பறிமுதல்
ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் என, மூன்று சட்டசபை தொகுதிகளில் சென்னப்பட்டணா மிகவும் பரபரப்பான தொகுதியாக உள்ளது.இத்தொகுதியில் குமாரசாமி, சிவகுமார் இடையிலான மோதல் என்பதே பொருத்தமாக இருக்கும். இரண்டு கட்சிகள் சார்பிலும், பணம் தண்ணீராக செலவிடப்படுகிறது. மதுபானம் ஆறாக ஓடுகிறது. இந்த தொகுதியில் மட்டுமே 29 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பிடிபட்டது.இது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டன. அக்டோபர் 16 முதல் நவம்பர் 11 வரை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, 33.30 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னப்பட்டணாவில் மட்டுமே 29 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பிடிபட்டது.ஷிகாவியில், 300 லிட்டருக்கும் அதிகமான மதுபானம், சண்டூரில் 2,926 லிட்டர், சென்னப்பட்டணாவில், 2,95,395 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷிகாவியில் 8.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.