சிக்கபல்லாபூரில் வேட்பாளர்களின் வெற்றி எளிதல்ல
- நமது நிருபர் -சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுதாகர், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா என, இருவருக்குமே வெற்றி எளிதல்ல என, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெயிப்பதற்காக இருவருமே போராட வேண்டும்.தேர்தல் பரபரப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் சிக்கபல்லாபூரும் ஒன்றாகும். காங்கிரஸ் பாதுகாப்பு கோட்டையான இத்தொகுதியில், தற்போது பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., முதன் முறையாக வெற்றி பெற்றது. இம்முறையும் வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.,முயற்சிக்கிறது.தன் கோட்டையை வசப்படுத்த, காங்கிரசும் உறுதி பூண்டுள்ளது. சட்டசபை தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர் சுதாகர், அதிகம் போராடி லோக்சபா தேர்தலில், சிக்கப்பல்லாபூர் தொகுதியில் சீட் பெற்றுள்ளார். பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தார். எடியூரப்பா உட்பட, முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர். கூட்டணி கட்சி ம.ஜ.த., தலைவர் குமாரசாமியும், சுதாகருக்காக பிரசாரம் செய்தார். எதிர் வரிசையில், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையாவுக்கும் கூட, எளிதில் சீட் கிடைக்கவில்லை. மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உட்பட பலருடன் முட்டி மோதி சீட் பெற்றார். வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவருக்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் போன்ற தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். சுதாகர், ரக்ஷா ராமையா இருவருமே, லோக்சபா தேர்தலுக்கு புதிய முகங்கள். சிக்கபல்லாபூரில் ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு உள்ளது. தற்போது இக்கட்சியுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது, சுதாகருக்கு பிளஸ் பாயின்டாக உள்ளது. ம.ஜ.த.,வின் ஓட்டுகள், இவருக்கு கிடைக்கும். சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஐந்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கவுரி பிதனுார் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ., புட்டசாமி கவுடாவும், காங்கிரசுடன் அடையாளம் காணப்படுகிறார். எம்.எல்.ஏ.,க்களின் ஒத்துழைப்பு, வாக்குறுதி திட்டங்களை நம்பி ரக்ஷா ராமையா நம்பியுள்ளார். ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியாக இருப்பதால், காங்கிரஸ் அஞ்சுகிறது.கூட்டணி வேட்பாளர் சுதாகர், சிக்கபல்லாபூரை சேர்ந்தவர். ஆனால் ரக்ஷா ராமையா, பெங்களூரில் வசிக்கிறார். இதையே பா.ஜ., பிரசார அஸ்திரமாக பயன்படுத்துகிறது. 'உள்ளூரை சேர்ந்தவருக்கு ஓட்டு போடுங்கள்' என்கிறது.காங்கிரஸ் தலைவர்கள், நாங்கள் வாக்குறுதி திட்டங்களை கொடுத்தோம். எங்களை ஆதரியுங்கள் என்கின்றனர். இதனால், இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், இங்கு வெற்றி எளிதல்ல. நிறைய பிளஸ், மைனஸ் உள்ளது. பா.ஜ., வேட்பாளர் சுதாகர்:பிளஸ் பாயின்ட்:* மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக செய்துள்ள வளர்ச்சி பணிகள்* பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி* பிரதமர் நரேந்திர மோடி அலைமைனஸ் பாயின்ட்: * லோக்சபா தேர்தலுக்கு புதியவர்* இரண்டு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இருப்பது* சில தலைவர்களின் அதிருப்திகாங்., வேட்பாளர் ரக்ஷா ராமையாபிளஸ் பாயின்ட்:* இளம் வேட்பாளர்* காங்., அரசின் வாக்குறுதி திட்டங்கள்* ஆறு தொகுதிகளில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதுமைனஸ் பாயின்ட்* அரசியல் அனுபவம் இல்லாதது* தொகுதியை சாராதவர்* ஆளுங்கட்சிக்கு எதிரான அலை***