புதுடில்லி: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாகவும், பல்கலை துணைவேந்தர் நியமனங்களில் கவர்னர் தலையீடு உள்ளதாகவும் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.இன்றும் இந்த வழக்கில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் திவேதி, ''மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, நிறுத்தி வைப்பது, பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என்பது சட்ட விரோதமானது. அமைச்சரவையின் உதவி, ஆலோசனை இல்லாமல் செய்வது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அரசியல் சட்டத்தின் 111வது பிரிவின்படி, ஜனாதிபதி ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்போது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படியே ஒப்புதல் அளிக்கிறார்,'' என்றார்.மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரலிடம், 'ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து விட்டு, சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமலும் இருந்து விட்டால், அந்த மசோதா என்ன ஆகும்,' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த அவர், ''அந்த மசோதா, உயிரற்றதாகி விடும்,'' என்றார்.இதற்கு மீண்டும் நீதிபதி பர்திவாலா, ''அப்படி உயிரற்றதாகி விட்டால், அந்த மசோதாவை எப்படி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும்,'' என்று எழுப்பினார்.இதற்கு அட்டர்னி ஜெனரல், ''ஜனாதிபதிக்கு கவர்னர் மசோதாவை அனுப்பி வைப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்த சரியான விளக்கம் இல்லாத நிலையில், கவர்னர் அனுப்பி வைக்க முடியும்,'' என்றார்.''கவர்னரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எப்படி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும்,'' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.அரசியல் சட்டம் தொடர்பான நுணுக்கமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.விவாதங்கள் முடிவில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.