உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 25 நடிகர், நடிகையர் மீது வழக்கு

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 25 நடிகர், நடிகையர் மீது வழக்கு

ஹைதராபாத்,: ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், பிரணீதா, ராணா டகுபதி உள்ளிட்ட 25 நடிகர், நடிகையர் மீது தெலுங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன், 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானபோது, தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் கைதானார்.இதனால், தெலுங்கு திரையுலகுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி, மோதல் போக்கை கடைப்பிடிப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர், நடிகையர், 25 பேர் மீது தெலுங்கானா போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். நாடு முழுதும் சூதாட்ட செயலிகளில் விளையாடி, ஏராளமானோர் பணத்தை இழந்ததோடு, பலர் தற்கொலையும் செய்வதால், அவற்றுக்கான ஆன்லைன் விளம்பரங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.அவற்றை பிரபலப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவர கொண்டா, நடிகையர் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரணிதா உட்பட 25 பேர் மீது மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு, தெலுங்கானா மாநில விளையாட்டு சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தெலுங்கானா போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். பணீந்திர சர்மா என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாதில் உள்ள மியாபூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவானது. முதல் தகவல் அறிக்கையில், 'இந்த சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், பிரபலங்கள் உதவியுடன் சமூக, ஊடக விளம்பரங்கள் வாயிலாக, தங்களின் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துகின்றன.'கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெறும் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி நடுத்தர குடும்பங்கள் சீரழிகின்றன' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ