பிரதமருக்கு எதிராக முழக்கமிட்ட காலிஸ்தான் பயங்கரவாதி மீது வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவருக்கு 11 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறியதுடன், நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நம் நாட்டின் பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோரி காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த, 1984ல், இந்திரா பிரதமராக இருந்தபோது, 'ஆப்பரேஷன் புளூஸ்டார்' என்ற பெயரில் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி, இந்த அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனாலும், இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு பெயர்களில் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் மறைமுகமாகவும், நேரடியாகவும் செயல்பட்டு வருகின்றனர். வட அமெரிக்க நாடான கனடாவில், 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற பெயரில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன், சமூக வலைதளங்களில் அவ்வப்போது 'வீடியோ' வெளியிட்டு வருகிறான். இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் பிரஸ் கிளப்பில் நடந்த 'மீட் தி பிரஸ்' என்ற நிகழ்வில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவன் பேசினான். அப்போது, இந்திய சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி, தேசியக்கொடியை ஏற்றுவதை தடுப்பவருக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்ததுடன், பஞ்சாப், டில்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய வரைப்படத்தை சுட்டிக்காட்டி இனி, இது காலிஸ்தான் என அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இது, இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக கூறி, குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் சர்வதேச அளவில் தொடர்புகள் இருக்கும் என்பதால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, என்.ஐ.ஏ., அமைப்பு இவ்வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.