சல்லிக்காசு வழங்காத மத்திய அரசு: அமைச்சர் ராமலிங்க ரெட்டி கேள்வி
தங்கவயல், : ''வறட்சி பாதிப்பில் இருக்கும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு சல்லிக்காசு கொடுக்கவில்லை. விவசாயிகள், மகளிர் நலனுக்காக எதையுமே செய்யவில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி குற்றம் சாட்டினார்.தங்கவயலில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் ஆறு மாதங்களாக விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு சல்லிக்காசும் வழங்கவில்லை. விவசாயிகள், மகளிர் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. எதை சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? இவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. தற்போது நாட்டின் மொத்த கடன் 185 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு நபர் மீதும் 1.50 லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளனர். கடன் சுமையை ஏற்றுவது தான், மோடி அரசின் உத்தரவாதம். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.ஐ.டி., என்ற வருமான வரித்துறை, இ.டி., என்ற அமலாக்கத் துறையை வைத்துக் கொண்டு பல நிறுவனங்களை மிரட்டுவது; பணம் பறிப்பது; தேர்தல் பாண்டுகளை குவிக்கிற வேலைகளை செய்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருக்காது என்று முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கொஞ்சமாவது யோசித்து, பேச வேண்டும். காங்கிரசில் இருந்து யாரையும் இழுக்க முடியாது. தண்ணீரில் உள்ள மீனை, தரையில் போட்டால் துள்ளுவது போல, பா.ஜ.,வினர் துள்ளுகின்றனர்.கோலார் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதிக்கு பா.ஜ., - எம்.பி., என்ன செய்தார் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும். கடந்த முறை காங்கிரசில் உட்கட்சி குழப்பத்தால் பா.ஜ., வெற்றி பெற்றது. இம்முறை குழப்பம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.